ETV Bharat / bharat

காங்கிரஸ் எம்.பி சசி தரூருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு!

author img

By ANI

Published : Feb 21, 2024, 2:37 PM IST

Shashi Tharoor: காங்கிரஸ் எம்.பி சசி தரூருக்கு பிரெஞ்சு நாட்டின் உயரிய செவாலியே விருது நேற்று டெல்லியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் வழங்கப்பட்டது.

காங்கிரஸ் எம்.பி சசி தரூருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு
காங்கிரஸ் எம்.பி சசி தரூருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினரும், திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூருக்கு பிரான்ஸ் அரசின் உயரிய செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாளராக இருந்து அரசியல்வாதியான சசி தரூர் காங்கிரஸ் கட்சியில் தேசிய அளவில் மூத்த தலைவர் ஆவார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருவனந்தபுரம் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சசி தரூருக்கு கடந்த 2022ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டு அரசு அந்நாட்டின் உயரிய செவாலியே விருது வழங்கப்படும் என அறிவித்தது.

இதனைத்தொடர்ந்து நேற்று டெல்லியில் உள்ள பிரெஞ்சு நாட்டுத் தூதரகத்தில் பிரெஞ்சு செனட் தலைவர் கெரார்ட் லார்ச்சர் செவாலிய விருதை சசி தரூருக்கு வழங்கினார். இது குறித்து பிரெஞ்சு தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா, பிரான்ஸ் உறவுகளை மேம்படுத்த டாக்டர் தரூர் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள், சர்வதேச அமைதி மற்றும் ஒத்துழைப்பு, மற்றும் பிரெஞ்சு அரசுடன் இருந்து வரும் நீண்ட கால நட்புறவு ஆகியவற்றைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

சசி தரூருக்கு வழங்கப்பட்ட விருது குறித்து பிரெஞ்சு செனட் தலைவர் லார்ச்சர் கூறுகையில், “டாக்டர் தரூர் பிரான்ஸின் உண்மையான நண்பர். பிரெஞ்சு நாட்டின் கலாச்சாரம் குறித்து நல்ல புரிதல் கொண்டவர். சசி தரூருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருதின் மூலம் அவரது சாதனைகள், நட்பு, பிரான்ஸ் நாட்டின் மீதுள்ள அன்பு ஆகியவை அங்கீகரிக்கப்படுகிறது” என்றார்.

இதனையடுத்து செவாலியே விருது பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் பேசுகையில், “பிரான்ஸ் நாட்டின் மீதும், அந்நாட்டின் மக்கள், மொழி, கலாச்சாரம், சினிமா, இலக்கியம் ஆகியவற்றின் மீது பற்றுக் கொண்டவராக இந்த விருதை பெற்றுக் கொள்வதில் பெருமை அடைகிறேன். என்னைப் பொறுத்தவரை எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது இந்தியா, பிரான்ஸ் நாட்டின் நட்புறவை மேலும் வலுப்படுத்தும்.

இந்த விருது ஒருவரது சாதனை அல்ல, இரண்டு நாடுகளின் கலாச்சார பரிமாற்றம் மற்றும் நட்புறவு உள்ளிட்ட கூட்டு முயற்சியின் பிரதிபலிப்பாகும். மேலும் இரு நாட்டு உறவை மேம்படுத்துவதற்கும், உலக அளவில் சமூக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் முயற்சிகளை மேற்கொள்வேன்” என பேசினார். இந்த விருது வழங்கும் விழாவில், பிரெஞ்சு தூதர் தியேரி மதாவ், இந்தியா G20 ஷெர்பா அமிதாப் கண்ட் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஆனந்த் சர்மா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: சண்டிகர் மேயர் தேர்தல்: ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.