ETV Bharat / bharat

விவசாயிகள் போராட்டம்..4ம் கட்ட பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் குழு கூறியது என்ன?

author img

By ANI

Published : Feb 19, 2024, 12:34 PM IST

Kisan Andolan
கிசான்

Kisan Andolan: விவசாயிகளுடன் நடைபெற்ற 4ம் கட்ட பேச்சுவார்த்தையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை வாங்குவதற்கு அரசு முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சத்தீஸ்கர்: குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் (MSP) உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைக்களை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசு விவசாயிகள் அமைப்பின் தலைவர்களுடன் நடத்திய 3 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் சத்தீஸ்கரில் நேற்று(பிப்.18) 4ம் கட்ட பேச்சுவார்த்தை நடைப்பெற்றது.

இதில், சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா போன்ற விவசாயிகள் தலைவர்கள், மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் கலந்து கொண்டார். 4 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பியூஸ் கோயல், "இந்த கூட்டத்தில் விவசாயிகளுடன் ஆலோசனை செய்த போது ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில், பருப்பு, மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிர்களை அரசு வாங்குவதற்கு மத்திய அமைச்சர்கள் குழு முன் மொழிந்தது. இது குறித்து விவசாயிகள் தலைவர்கள் தங்கள் மன்றங்களில் ஆலோசித்து இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும் எனக் கூறி உள்ளனர்.

மேலும், என்.சி.சி.எஃப்(NCCF) மற்றும் என்.ஏ.எஃப்.இ.டி(NAFED) போன்ற கூட்டுறவு சங்கங்கள் துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு, மைசூர் பருப்பு அல்லது மக்காசோளத்தைப் பயிரிடும் விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அவர்களின் பயிர்களை MSPயில் வாங்குவோம். வாங்கிய அளவுக்கு வரம்பு இருக்காது. இதற்காக ஒரு இணையதளம் உருவாக்கப்படும் என்றார். இது பஞ்சாபின் விவசாயத்தைக் காப்பாற்றும்" என்று கூறினார்.

இதுகுறித்து விவசாயிகளின் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறுகையில், "MSP மீதான சட்டம், சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகள் மற்றும் கடன் தள்ளுபடி போன்ற பிரச்னைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன" என்றார்.

இதுகுறித்து விவசாயிகளின் தலைவர் சர்வான் சிங் பந்தேர் கூறுகையில், "பிப்.19, 20 ஆகிய தேதிகளில் எங்கள் மன்றங்களில் விவாதித்து முடிவெடுக்கப்படும். கடன் தள்ளுபடி மற்றும் பிற கோரிக்கைகள் மீதான விவாதம் நிலுவையில் உள்ளன. அடுத்த இரு தினங்களில் அவைகள் தீர்க்கப்படும் என நம்புகிறோம். பிரச்னைகள் தீர்க்கப்பட வில்லை என்றால் வரும் பிப்.21ஆம் தேதி டெல்லி அணி வகுப்பு மீண்டும் தொடங்கும்" என்றார்.

முன்னதாக, பஞ்சாபிலிருந்து விவசாயிகள் டெல்லிக்கு அணிவகுத்துச் சென்றனர், அப்போது பஞ்சாப் - ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு பகுதிகளில் பாதுகாப்பு பணியாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

விவசாயிகள் கோரிக்கைகள்: பயிர்களுக்கு MSPக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாயக் கடன் தள்ளுபடி, மின் கட்டண உயர்வு, போலீஸ் வழக்குகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் 2021 லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013-ஐ மீண்டும் நடைமுறைப்படுத்துதல் மற்றும் 2020-21ல் முந்தைய போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: "செங்கோட்டையில் கழிப்பறை பிரச்சினை, பெண்கள் கண்ணியம் குறித்து பேசிய முதல் பிரதமர் நான்" - பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.