தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆருத்ரா தரிசனம்.. திரளான பக்தர்கள் பங்கேற்பு!
Published : Dec 27, 2023, 11:28 AM IST
தேனி:ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடராஜபெருமானுக்கு இன்று (டிச.27) அதிகாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மார்கழி மாதத்தின் பெளர்ணமி நன்னாளில், திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜ பெருமானின் தரிசனம் காண்பது ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த புண்ணிய நாளில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் உள்ள நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தேனியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில், தனி சன்னதியில் அருள்பாலிக்கும் நடராஜபெருமானுக்கு மஞ்சள் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேக பொருட்கள் கொண்டு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து, வண்ண மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்த நடராஜபெருமானுக்கு, நட்சத்திர தீபம், மகா தீபம், பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டு, சோடச உபசாரம் நடத்தப்பட்டது. நடராஜப்பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.