தமிழ்நாடு

tamil nadu

CCTV:வங்கியில் கொள்ளை: சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த இளைஞர் கைது!

By

Published : Mar 24, 2023, 5:06 PM IST

சிசிடிவி காட்சி

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் ஐடிஎப்சி என்ற தனியார் நிதி நிறுவன கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி நள்ளிரவில் பூட்டு உடைக்கப்பட்டு, சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள், லாக்கரிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டதாக அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகத்தை மறைத்தவாறு வங்கியில் நுழைந்து லாக்கரில் இருந்து சாவகாசமாக பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வங்கியின் பழைய சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் அடிக்கடி வங்கிக்கு வரும் இளைஞர் ஒருவர் சந்தேகப்படும் வகையில் வங்கியை நோட்டமிட்டது தெரியவந்தது. காவல் துறையினரின் விசாரணையில், அந்த நபர் கேரள மாநிலம், இடுக்கியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது மகன் மனோஜ் என்பதும், அன்னூர் அடுத்த குன்னத்துராம் பாளையத்தில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. 

இதனையடுத்து மனோஜை பிடிக்க தனிப்படை அமைத்து காவல் துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் ரகசியத்தகவலின் பேரில் அன்னூர் அருகே மனோஜை காவல் துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இதனை அடுத்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தபோது, சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நிதி நிறுவனத்தில் பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்ததும், அந்த பணத்தில் கோவையில் இருந்து விமானம் மூலம், மும்பை, டெல்லி மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு பயணித்து, அங்கு உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து மனோஜை கைது செய்த காவல் துறையினர், அன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சொகுசு வாழ்க்கைக்காக இளைஞர் நிதி நிறுவனத்தில் கொள்ளையில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இதையும் படிங்க:ஆருத்ரா கோல்டு பண மோசடி வழக்கு: பாஜக நிர்வாகி உட்பட 2 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details