தமிழ்நாடு

tamil nadu

தஞ்சையில் 5ஜி செல்போன் டவர் வேண்டாம்.. மறியல் செய்த மக்களால் பரபரப்பு!

By

Published : Jun 20, 2023, 7:41 PM IST

குடியிருப்புகளில் 5ஜி செல்போன் டவர்களுக்கு எதிர்ப்பு

தஞ்சாவூர்: கும்பகோணம் சோலையப்பன் தெருவில் அமைந்துள்ள விஸ்வநாதர் திருக்கோயில் பின்புறம், புதிதாக 5ஜி தனியார் செல்போன் டவர் அமைக்க, அப்பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்தனர். மேலும் அப்பகுதி பொது மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து, திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பானது. இதனால் கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கும்பகோணம் சோலையப்பன் தெரு, காவிரியாற்றின் இராஜேந்திரன் படித்துறை அருகே குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமான விசாலாட்சி சமேத விஸ்வநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இதன் பின்புறம் காலியாகவுள்ள இடத்தில், தனியார் நிறுவனத்தின் (ஏர் டெல்) 5ஜி செல்போன் டவர் அமைக்க, சம்மந்தபட்ட சமூகத்தின் அறங்காவலர் குழுவிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் டவர் அமைக்க அந்த சமூகத்தினர், பல லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கியதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து தனியார் செல்போன் நிறுவனம் ஒப்பந்ததாரர் ரஞ்சித் என்பவர் தலைமையில் கடந்த ஒரு வார காலமாக செல்போன் கோபுர அமைக்க ஏதுவாக, சுமார் 15 ஆழத்தில் பெரிய பள்ளம் தோண்டி, பவுண்டேஷன் அமைக்க கம்பி கட்டும் பணிகளில் ஈடுபட்டு வந்ததுள்ளார். இந்நிலையில், இதனை எதிர்த்து இன்று முற்பகல் அப்பகுதி மக்கள்  சம்பவ இடத்தை வேலைகள் மேற்கொள்ளாத வகையில் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். மேலும் அப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் கூடி நின்று செல்போன் நிறுவனம் மற்றும் சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது கண்டன முழக்கங்களை எழுப்பினர். இது குறித்து முறைப்படி தஞ்சை மாவட்ட ஆட்சியர், கும்பகோணம் கோட்டாட்சியர், கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் இன்று கோரிக்கை மனு அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 

அப்பகுதி பொது மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து, தற்காலிகமாக கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து சம்மந்தப்பட்ட அறக்கட்டளையின் தலைவர் இளங்கோ மற்றும் செயலாளர் குமார் (எ) வெங்கடேசனை பல முறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் அவர்கள் தரப்பு கருத்தை அறிய முடியவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க:"எனக்கு பரிசுன்னா இதுதான் வேணும்" - மீண்டும் வலியுறுத்திய உதயநிதி

ABOUT THE AUTHOR

...view details