திருவண்ணாமலையில் விமரிசையாக நடைபெற்ற குபேர மகாலட்சுமி யாகம்! சங்கல்பம் செய்த ஜப்பானியர்!
Published : Jan 7, 2024, 4:08 PM IST
திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக ஸ்ரீ அஷ்டலட்சுமி நவநிதி சகித ஸ்ரீ குபேர தன ஆகர்ஷன மகாலட்சுமி மகா யாகம் விமரிசையாக நடைபெற்றது. இந்த யாகம் நடத்துவதற்காக பிரத்யேகமாக பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கோயில் வடிவிலான செட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள யாக குண்ட வளாகத்தில், ஸ்ரீ குபேர லட்சுமி தாயார் சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து 36 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 125 தீட்சிதர்கள் மூலம் பல்வேறு வகையான மூலிகைப் பொருட்கள் மற்றும், பல்வேறு வகையான பழ வகைகள் மற்றும் வஸ்திர வகைகளைக் கொண்டு சிறப்பு மகா யாகம் நடைபெற்றது. தீட்சிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க, 36 யாக குண்டங்களிலும் மகாபூர்ணகதியும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இந்த குபேர மகாலட்சுமி மகா யாக நிகழ்வில் வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகர்கள் மற்றும் ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு, சங்கல்பம் செய்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்களும் யாக நிகழ்வில் கலந்து கொண்டு, மகா சங்கல்பம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.