Video: அரசு அலுவலக வளாகத்தில் பிடிபட்ட 5 அடி நீள சாரை பாம்பு!!
Published : Sep 11, 2023, 4:44 PM IST
சேலம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பழைய நாட்டாண்மை கட்டிடம் உள்ளது. இதில் நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்காக இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்வது வழக்கம்.
அதே நேரத்தில் இந்த அலுவலகங்களை சுற்றிலும் செடி, கொடிகள் நிறைந்து புதர்மண்டி இருப்பதால் மக்கள் ஒருவித அச்சத்துடன் வந்து செல்கின்றனர். மேலும் நாட்டாண்மை கட்டிடத்தின் பின்புறம் ஆங்கிலேயர் கால இடுகாடு ஒன்று அமைந்துள்ளது. அங்கு பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அதிகம் இருப்பதால் அவை அடிக்கடி இந்தப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்து விடுகின்றன.
அவ்வாறு இடம் பெயர்ந்து வரும் பாம்புகள் பகல் நேரத்திலேயே உலா வருவதை கண்டு அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடிப்பது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 10ஆம் தேதி) நாட்டாண்மை கட்டிட வளாகத்தில் செயல்பட்டு வரும் தேநீர் கடையில் வழக்கம் போல் உரிமையாளர் தேநீர் மற்றும் பலகாரங்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவரது கடைக்குள் 5 அடி நீள சாரைப்பாம்பு நுழைந்தது. அதனைப் பார்த்த கடையில் இருந்த பெண் உரிமையாளர் அலறியடித்தபடி வெளியேறினார். பின்னர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த பாம்பை சுமார் அரைமணி நேரம் போராடி லாவகமாக பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.
அரசு அலுவலகங்கள் உள்ள வளாகத்தில் தேநீர் கடைக்குள் பாம்பு புகுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக நாட்டாண்மை கட்டிட வளாகத்தில் உள்ள செடி, கொடி புதர்களை அகற்றி தூய்மைப்படுத்தி விஷ ஜந்துக்கள் நடமாடாத வகையில் வளாகம் செயல்பட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: "மகளிர் உரிமைத் தொகையால் எங்களுக்குத் தான் பிரச்சினை"- திடீர் போர்க் கொடி தூக்கிய வருவாய்த்துறை.. என்ன காரணம்?