அரிக்கொம்பனால் தோட்ட வேலைகளுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிப்பு!
தேனி: கம்பம் நகர் பகுதிக்குள் கடந்த 27-ஆம் தேதி உலா வந்த அரிக்கொம்பன் தற்போது சண்முக நதி அணை பகுதி அருகே உள்ள வனப்பகுதிக்குள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சுற்றி வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனத்துறையினர் தலைமையில், யானையின் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ காலர் கருவி மூலம் அரிக்கொம்பனை தீவிரமாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் யானையை பிடிக்க மருத்துவக் குழுக்கள் தயாராக இருக்கின்ற நிலையில், யானைக்கு மயக்க ஊசி செலுத்தும் போது அதற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், மயக்க ஊசி செலுத்திய பின்பு யானையை வாகனத்தில் ஏற்றிச் செல்ல ஏதுவாக இருக்க வேண்டும் என்பதாலும் வனத்துறையினர் பொறுமை காத்து வருகின்றனர்.
மேலும் அந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள தோட்டத்திற்கு விவசாயிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளதால், தோட்டப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும், அரிக்கொம்பனை விரைவாக பிடித்து தங்களின் தோட்டப்பணிகளை தொடர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:Arikomban Elephant: பொதுமக்களால் அரிக்கொம்பன் அச்சம் - அமைச்சர் மதிவேந்தன்