தமிழ்நாடு

tamil nadu

பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமின்: காவல்துறையின் கஸ்டடி மனுவுக்கு முகாந்திரம் இல்லை என உத்தரவிட்ட நீதிமன்றம்

By

Published : Aug 1, 2023, 3:56 PM IST

காவல்துறையின் கஸ்டடி மனுக்கு முகாந்திரம் இல்லை

பெரம்பலூர்:அரசியல் விமர்சகராகவும், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளராகவும், மக்கள் மத்தியில் புகழ்பெற்றவர், பத்ரி சேஷாத்ரி. சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மணிப்பூர் சம்பவம் தொடர்பாக வன்முறையைத் தூண்டும் விதத்திலும், உச்ச நீதிமன்ற நீதிபதியை அவமதிக்கும் வகையிலும் அவர் பேசியுள்ளார் எனக் கூறி பெரம்பலூர் மாவட்டம், காடூரைச் சேர்ந்த வழக்கறிஞர் கவியரசு என்பவர், குன்னம் காவல் நிலையத்தில் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி மீது புகார் அளித்திருந்தார். 

அதன் அடிப்படையில் குன்னம் போலீசார் பத்ரி சேஷாத்ரி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி கடந்த சனிக்கிழமை சென்னையில் கைது செய்யப்பட்டு பெரம்பலூர் அழைத்து வரப்பட்டார். அதனைத்தொடர்ந்து பத்ரி சேஷாத்ரி, குன்னத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கவிதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது நீதிபதி கவிதா, பத்ரி சேஷாத்ரியை எதிர்வரும் 11ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி பத்ரி சேஷாத்ரி திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து பத்ரி சேஷாத்ரி ஜாமின் கேட்டு குன்னம் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதேபோல், குன்னம் போலீசாரும் பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியை நீதிமன்றக்காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி மனுதாக்கல் செய்திருந்தனர். 

ஜாமின் மனு, போலிஸ் கஸ்டடி மனு என இரண்டு மனுக்களும் இன்று குன்னம் நீதிமன்றத்தில் நீதிபதி கவிதா முன்பு விசாரணைக்கு வந்தது. முதலில் காவல் துறை கஸ்டடி கேட்ட மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இரு வாதங்களையும் கேட்ட நீதிபதி, போலீஸ் கஸ்டடி தேவை இல்லை என்றும்; அதற்கான முகாந்திரம் இல்லை என்றும் கூறி போலீசாரின் மனுவை தள்ளுபடி செய்தார். அதனையடுத்து பத்ரி சேஷாத்ரி தாக்கல் செய்த ஜாமின் மனு விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து அதனை விசாரித்த நீதிமன்றம் பத்ரி சேஷாத்ரிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

ABOUT THE AUTHOR

...view details