தமிழ்நாடு

tamil nadu

பயணத்தின் நடுவே அச்சோடு முறிந்த பேருந்தின் சக்கரங்கள்..சேலத்தில் பேருந்து பயணிகளின் நிலை என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 6:53 PM IST

Etv Bharat

சேலம்: சேலம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் பின்பக்க சக்கரங்கள் இல்லாமல் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பேருந்தில் பயணித்தவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.

சேலம் எடப்பாடி அருகே வெள்ளாண்டி வலசை சேர்ந்த விஜயன் என்பவர் தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று (டிச.15) பயணிகளை ஏற்றிக்கொண்டு, எடப்பாடிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் நடத்துநர் கதிர் உட்படப் பயணிகள் பல இருந்தனர்.

அப்போது அரியலூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, பேருந்தில் முன்பக்க சக்கரத்தின் டயர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதை உணர்ந்த பேருந்து பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 

இந்நிலையில், தாறுமாறாக ஓடிய பேருந்தில் சில விநாடிகளில் பின்பக்க சக்கரங்களின் அச்சும் முறிந்தது. அதோடு, பேருந்திலிருந்து சக்கரங்கள் அச்சோடு தனியாகக் கழன்று விழுந்த நிலையில், பேருந்தின் மேற்பகுதி மட்டும் சில தூரங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டது.

பேருந்தில் பின்பகுதி சாலையில் உரசியபடி சென்றதால் பயங்கர சத்தம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் பயந்து கூச்சலிட்டனர். சிறிது தூரத்தில் ஓட்டுநர் பேருந்தைச் சாமர்த்தியமாக நிறுத்தினர். பின்னர், பேருந்திலிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். 

இதைத்தொடர்ந்து, தகவலறிந்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், பயணிகளை மீட்டு வேறு பேருந்தில் அவரவர் ஊர்களுக்குப் பத்திரமாகச் செல்ல நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details