தமிழ்நாடு

tamil nadu

மேல்பாதிக்கு வந்த இயக்குநர் வ.கெளதமனுக்கு அனுமதி மறுப்பு.. உயர் கல்வித்துறை அமைச்சர் மீது குற்றச்சாட்டு!

By

Published : Jun 15, 2023, 10:38 AM IST

Updated : Jun 15, 2023, 11:10 AM IST

திரெளபதி அம்மன் கோயிலில் பட்டியல் சமூக மக்கள் அவர்களை காண முயன்ற திரைப்பட இயக்குநர் வ. கெளதமனுக்கு அனுமதி மறுப்பு.

மேல்பாதிக்கு வந்த இயக்குநர் வ. கெளதமனுக்கு அனுமதி மறுப்பு!
மேல்பாதிக்கு வந்த இயக்குநர் வ. கெளதமனுக்கு அனுமதி மறுப்பு!

திரைப்பட இயக்குநர் வ.கெளதமன் செய்தியாளர் சந்திப்பு

விழுப்புரம்:கோலியனூர் அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள அருள்மிகு தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலில் பட்டியல் இன மக்கள் வழிபாடு மேற்கொள்வதில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து, அந்தக் கோயிலுக்கு வருவாய்த் துறையினர் கடந்த ஜூன் 7ஆம் தேதி பூட்டி சீல் வைத்தனர். இந்த நிலையில், திரைப்பட இயக்குநர் வ.கெளதமன் நேற்று (ஜூன் 14) மேல்பாதி கிராமத்துக்குச் சென்று அங்கு இருந்த பெண்களிடம் பேச முயற்சி செய்து உள்ளார்.

இதனிடையே, இது தொடர்பாக தகவல் அறிந்த வளவனூர் காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.பாலமுருகன் தலைமையிலான காவல் துறையினர், அங்கு சென்று இயக்குநர் கெளதமனை கிராம மக்களிடையே பேசுவதற்கு அனுமதி மறுத்தனர். தொடர்ந்து, அவர் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

இதன் பின்னர், மாவட்ட எஸ்பி கோ.சஷாங்க் சாயை சந்தித்த இயக்குநர் கெளதமன், மேல்பாதி பிரச்னை குறித்து கேட்டறிந்தார். அப்போது, மேலாபாதி பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது எனவும், அங்கே வெளி ஆட்கள் செல்ல அனுமதி இல்லை எனவும் மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார். இதனையடுத்து இயக்குநர் கெளதமன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய கெளதமன், “மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் வழிபாடு மேற்கொள்வதில் எவ்வித பிரச்னையும் இல்லை. அரசியல் கட்சியினர் பெரிதுபடுத்தியதன் காரணமாகவே இந்தப் பிரச்னை உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சியினர் தங்களது இருப்பை உறுதி செய்து கொள்வதற்காகவே திட்டமிட்டு தூண்டி விட்டுள்ளனர். தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் தூண்டுதலின் பெயரிலேயே இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.

இந்தக் கோயில் பிரச்னை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் 7 முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், இன்னும் தீர்வு காணப்படவில்லை. திரெளபதி அம்மன் கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமானது என்பதற்கான ஆதாரமும் காட்டப்படவில்லை.

ஆனால், பட்டியல் இன மக்களை மட்டும் குறிவைத்து தாக்கும் நேர்மையற்ற போக்கை அரசியல் கட்சிகள் கைவிட வேண்டும். இரு சமூக மக்களும் ஒன்றாக இருந்தால் மட்டுமே இந்த மண்ணின் வரலாறும், உரிமையும் காக்கப்படும். அரசியல் சுய லாபத்திற்காக மக்களிடையே வன்மத்தைத் தூண்டுபவர் யாராக இருந்தாலும் அதனை ஏற்க முடியாது” என கூறினார்.

இதையும் படிங்க:TN Schools: அம்மா கிட்ட போகணும், அம்மா வாம்மா..! பிள்ளைகளை பிரிந்த தாய்மார்களின் நெகிழ்ச்சி வீடியோ!

Last Updated :Jun 15, 2023, 11:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details