ETV Bharat / state

TN Schools: அம்மா கிட்ட போகணும், அம்மா வாம்மா..! பிள்ளைகளை பிரிந்த தாய்மார்களின் நெகிழ்ச்சி வீடியோ!

author img

By

Published : Jun 14, 2023, 7:21 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட துவக்க பள்ளியில், கோடை விடுமுறைக்கு பிறகு இன்று வகுப்புகள் துவங்கியது. மழலைகள் தங்களது தாயை அழைத்தவாரே வாசலை நோக்கி பார்த்துக்கொண்டு அழைத்தபடியே பள்ளிக்குள் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அம்மா கிட்ட போகணும், அம்மா வாம்மா! அழுது கொண்டே பள்ளியின் வாசலை நோக்கி ஓடிய சிறுவர்கள்
அம்மா கிட்ட போகணும், அம்மா வாம்மா! அழுது கொண்டே பள்ளியின் வாசலை நோக்கி ஓடிய சிறுவர்கள்

அழுது கொண்டே பள்ளியின் வாசலை நோக்கி ஓடிய சிறுவர்கள்

மயிலாடுதுறை: கோடை விடுமுறைக்கு பிறகு இன்று தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் முதல் நாளில் குட்டீஸின் அட்ராசிட்டிகளும் உடன் ஆரம்பித்தன. தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட ஸ்ரீ திருஞானசம்பந்தர் துவக்கப்பள்ளியில் இன்று வகுப்புகள் துவங்கப்பட்டது. இந்நிலையில் முதல் நாளான இன்று பள்ளி குழந்தைகள் தேவதைகள் போன்று வேடமிட்டு பள்ளிக்கு வருகை தந்தனர்.

குழந்தைகளைப் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மேலத் தாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்தார். இந்த ஆண்டு முதன் முதலாகப் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தில் தேம்பித் தேம்பி கண்ணீர் விட்டபடி தங்கள் அம்மாவைத் தேடிய காட்சிகள் காண்பவர்களை உணர்ச்சியூட்டும் விதமாக இருந்தது.

“அம்மா கிட்ட போகணும், அம்மா வாம்மா”, என்று தங்கள் பிஞ்சு கைகளால் வாசலை நோக்கி அழைத்தபடியே குழந்தைகள் அழுது கொண்டே இருந்தன. அவர்களைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த சிரமப்பட்டு ஆறுதல் படுத்தி பின் வகுப்பறைகளுக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் பிடியிலிருந்து தப்பிய ஒரு சில குழந்தைகள் பள்ளியின் வாசலை நோக்கி ஓடினர். அவர்களை ஆசிரியர்கள் பின்னால் ஓடிச் சென்று பிடித்து இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு வகுப்பறைகளுக்கு அழைத்துச் சென்றனர்.

குழந்தைகள் அம்மாவைப் பிரிந்து அழுதபடி நின்றது ஒருபுறமென்றால் மறுபுறம் குழந்தைகளைப் பிரிந்த அம்மாக்கள் பள்ளி வாசலுக்கு முன்புறம் குழந்தையின் கண்ணுக்குத் தெரியாதபடி மறைந்து நின்று எட்டி எட்டிப் பார்த்து கண்களைக் கசக்கிக் கொண்டு நின்றனர். பிறந்தது முதல் அம்மாவைப் பிரியாத குழந்தைகள், புது சீருடை, காலணிகள் அணிந்து அழகாகப் பள்ளிக்குச் சென்றாலும் தங்கள் அம்மாவைத் தேடியபடி அழுத காட்சிகள் உணர்ச்சிவயமான ஒன்றாக இருந்தது.

தொடக்கப் பள்ளியில் மயிலாடுதுறை மாவட்டத்திலேயே அதிகளவாக 157 மாணவர்களைச் சேர்த்து தருமபுரம் ஆதீனப்பள்ளி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கு வந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பார்த்தசாரதி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேசனைப் பாராட்டியதுடன் அரசின் நலத்திட்ட உதவிகளான பள்ளி சீருடை, புத்தகங்கள், எழுது பொருள்கள் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு வழங்கி பாராட்டி வரவேற்பு தெரிவித்தனர்.


இதையும் படிங்க: செங்கோல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த திருவாவடுதுறை ஆதீனகர்த்தர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.