தமிழ்நாடு

tamil nadu

ஏனாதிமங்கலம் மணல் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை..

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 7:09 PM IST

ED raids: விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலத்தில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அலுவலர்கள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏனாதிமங்கலம் மணல் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை
ஏனாதிமங்கலம் மணல் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை

விழுப்புரம்:திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலத்தில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை அலுவலர்கள் இன்று (அக்.16) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். தென்பெண்ணையாற்றில் செயல்பட்டு வந்த இந்த மணல் குவாரியில், அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக மணல் அள்ளியதாகத் தொடர் புகார்கள் எழுந்தன.

மேலும் இது‌ தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏனாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜன் என்ற வழக்கறிஞர், இந்த குவாரிக்கு எதிராக ரிட் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், “ஏற்கெனவே இங்கு செயல்பட்ட மணல் குவாரிகளால் எங்கள் பகுதியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்திருக்கிறது. இந்நிலையில், இந்த குவாரி புதிதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த குவாரியை முழுமையாக நிறுத்துவது தொடர்பாக முதலமைச்சர், தனிப்பிரிவு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு மீட்டர் ஆழத்துக்கு மேல் மணலை ஆற்றிலிருந்து எடுக்கக் கூடாது. ஆனால் இங்கு 3 முதல் 4 மீட்டர் ஆழம் வரை மணல் எடுக்கப்படுகிறது.

அரசு அனுமதியைத் தாண்டி 8-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 24 மணி நேரமும் மணல் குவாரி இயங்குகிறது” என அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, “2 பொக்லைன் இயந்திரங்கள் மட்டுமே செயல்பட அனுமதி இருக்கும்போது, சுமார் 6 பொக்லைன் இயந்திரங்கள் இருப்பது ஆதாரமாக இணைக்கப்பட்ட புகைப்படத்தில் தெரிகிறது. மேலும், சுமார் 10 நிபந்தனைகளை மீறியிருப்பதாகத் தெரிகிறது” எனத் தெரிவித்தார்.

எனவே, இந்த மணல்குவாரி செயல்படுவதற்கு இடைகால தடை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார். அதைத் தொடர்ந்து, நீதிபதியின் தீர்ப்பிற்கினங்க மணல் குவாரியானது மூடப்பட்டது. இந்நிலையில், தற்போது மணல் குவாரி இயங்கிய இடத்தில் 7 அலுவலர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், ட்ரோன் கேமரா கொண்டு மணல் குவாரியில் எவ்வளவு மணல் அள்ளப்பட்டது போன்ற விவரங்களைப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:'லியோ' அதிகாலை காட்சிக்கு அனுமதி கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் சொன்னதென்ன..?

ABOUT THE AUTHOR

...view details