ETV Bharat / state

'லியோ' அதிகாலை காட்சிக்கு அனுமதி கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் சொன்னதென்ன..?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 3:03 PM IST

Leo Movie special show: நடிகர் விஜயின் லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு நாளை விசாரிக்கப்படும் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Actor vijay Leo movie special show permission petition madras high court hear tomorrow
லியோ படத்திற்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையில் நடிகர் விஜய் நடித்து அக்டோபர் 19-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள "லியோ" படத்திற்கான அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுத்ததுடன், காலை 7 மணி காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அதிகாலை 4 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனம் சார்பில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு முறையீடு செய்யப்பட்டது.

அப்போது, தயாரிப்பு நிறுவனம் சார்பில், திட்டமிட்டே 4 மணி காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவல்துறை பாதுகாப்பைக் காரணமாகக் கூறி அனுமதி மறுக்கப்பட்டதை ஏற்க முடியாது. தினமும் 6 காட்சிகள் திரையிடும் அளவுக்கு நேரம் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், மதுரை உயர்நீதிமன்றத்தில் ரசிகர்களின் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது எனத் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தெரிவித்தார். மேலும், லியோ படத்தின் டீசர் வெளியீட்டை போதிய அனுமதி வாங்காமல் நடத்தியதால் ரோஹிணி திரையரங்கில் ஏற்பட்ட மோதல் சம்பவம் போல, பல திரையரங்குகளில் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதுபோல வேறு எங்கும் நடைபெற்று விடக் கூடாது என்ற அடிப்படையில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அக்டோபர் 19-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை காலை 7 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி அனிதா சுமந்த, மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கின் விவரங்களைத் தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை நாளை (அக்.17) ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: லியோ படம் வெற்றி பெற வேண்டுதல்! பொங்கல் வைத்து பூஜை செய்த ரசிகர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.