வேலூர்: விபத்தில் காயம் ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்த கட்டிட மேஸ்திரியின் உடல் உறுப்புகள் குடும்பத்தினரின் சம்மதத்தோடு தானமாக வழங்கப்பட்டது. வேலூர் ஓல்டு டவுன் உத்திரமாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் கண்ணகி. இவரின் மகன் பிரசாந்த் (வயது 31).
கட்டிட மேஸ்திரியான இவர் கடந்த 14 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் பள்ளிகொண்டாவுக்கு சென்ற போது விபத்து ஏற்பட்டது. இதில் பிரசாந்த் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
உடலில் எந்த முன்னேற்றம் இல்லாததிருந்த நிலையில் பிரசாந்த் மூளைச்சாவு அடைந்தார். அவருக்கு மூளைசாவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரின் உடல் உறுப்புகளை தனமாக வழங்க குடும்பத்தினர் முன் வந்தனர். இதனையடுத்து பிரசாந்தின் இதயம் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கும், நுரையீரல் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும், கல்லீரல் ராணிப்பேட்டை சி.எம்.சி மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் சி.எம்.சி மியாட் மற்றும் சிம்ஸ் மருத்துவமனைகளுக்கும் தானமாக வழங்கப்பட்டு அங்குள்ள நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.
இதன்மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மூளைச்சாவு அடைந்த பிரசாந்தின் தாயார் கண்ணகி "என் மகன் இன்று என்னுடன் இலையென்றாலும் உடல் தானம் மூலம் பிறர் உடலில் உயிரோடு உள்ளான்" என உருக்கமாகத் தெரிவித்தார். இச்சம்பவம் காண்போரை கண்கலங்கச் செய்தது. தொடர்ந்து மக்களிடம் உடல் உறுப்புகள் தானம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருவதால் மக்கள் உடல் உறுப்புகளை தானம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"கள்ளச்சாராய மரணம் அறிந்து சாப்பிடாமல் கூட விழுப்புரம் சென்ற முதலமைச்சர்" - அமைச்சர் துரைமுருகன்!