திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை சிமிக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குமார். கூலித்தொழிலாளியான இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன் சிலம்பரசன் (23 ). சிலம்பரசன் சென்னையில் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகின்றார். சிலம்பரசன் ஆந்திர மாநிலம் குண்டலம் மடுவு பகுதியைச் சேர்ந்த விவசாயி ஆனந்தனின் இரண்டாவது மகள் அகல்யாவை (19) காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு, ஓடிச் சென்று கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். ஒரு மாத காலமாக பூந்தென்றலாய் வாழ்ந்து வந்த அகல்யாவின் திருமண வாழ்க்கையில், மாமியார் என்ற போர்வையில் வரதட்சணை புயல் அடிக்க ஆரம்பித்தது. அகல்யா மாமியார் வசந்தாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒருவருக்கும் திருமணத்தைத் தாண்டிய உறவு இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் அகல்யாவிற்கு தெரிய வரவே, அவரது மாமியார் வசந்தா, அகல்யாவை வரதட்சணை என்ற போர்வையில் கொடுமை செய்து வந்துள்ளார். அதனோடு காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவனும் அகல்யாவை கொடுமைப்படுத்தியதால், பெற்றோர் வீட்டிற்கும் செல்ல முடியாமல் ஒவ்வொரு நாளும் கொடுமையை அனுபவித்து வந்துள்ளார் அகல்யா.
இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட குடும்பச் சண்டையில் வாக்குவாதம் முற்றி போகவே, அகல்யாவை அவருடைய மாமியாரும், கணவரும் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.