தமிழ்நாடு

tamil nadu

"வள்ளலாரை சனாதனத்தின் உச்சம் என்று ஆளுநர் கூறுவது அறியாமை" - அமைச்சர் பி.கே.சேகர்பாபு விமர்சனம்!

By

Published : Jun 22, 2023, 7:26 PM IST

வள்ளலாரை சனாதனத்தின் உச்சம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது அவரது அறியாமையை வெளிக்காட்டுகிறது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு

வேலூர்:இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வேலூர், திருவண்ணாமலை மண்டலங்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஜூன் 22) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, “பொதுவுடமை, பொதுஅறிவு மட்டுமின்றி இயற்கையில் மருத்துவத்தையும் கண்டவர் வள்ளலார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய அவர், அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்றும் கூறியுள்ளார். அத்தகைய மாமனிதரை சனாதனத்தின் உச்சம் என்று ஆளுநர் ஆர்.என். ரவி கூயிருப்பது அவரது அறியாமையை காட்டுகிறது. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இந்து சமய அறநிலையத்துறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது. வேறெந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு இத்துறை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவது திமுக ஆட்சியில் மட்டும்தான்.

அதனாலேயே, எந்தக்காலத்திலும் இல்லாத அளவுக்கு இந்த ஆட்சியில் கோயில்களுக்கு கூட்டம் அதிகரித்திருப்பதுடன், உண்டியல் வசூலும், வைப்பு நிதியும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதற்கு சமயபுரம் மாரியம்மன் கோயில் வைப்பு நிதி 2 ஆண்டுகளில் ரூ.102 கோடியாக உயர்ந்திருப்பதே உதாரணமாகும். தவிர, பொதுமக்கள் முன்னிலையிலேயே உண்டியல் எண்ணப் படுவதும், அதனை வீடியோவில் பதிவு செய்து யூடியுப்பில் நேரடி ஒளிபரப்பு செய்வதும் என வேறெந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பிறகு இந்துசமய அறநிலையத்துறையில் இதுவரை 64 பேர் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியமர்த்தப்பட்டிருப்பதுடன், தேர்வு செய்யப்பட்டுள்ள 84 பேரை விரைவில் பணியமர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளாக பதவி உயர்வின்றி இருந்த செயல்அலுவலர், உதவி ஆணையர், துணை ஆணையர் பொறுப்புகளில் இருந்த 180 பேருக்கு உதவி ஆணையர், துணைஆணையர், இணை ஆணையராக பதவி உயர்வு அளிக்கப்பட்டிருப்பதுடன், நேரடி கவுன்சிலிங் முறையில் அவர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.

விரைவில் அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும். இதனிடையே, பொதுப்பணித்துறை மூலம் இந்து சமய அறநிலையத்துறையில் 84 பொறியாளர்கள் நியமிக்கவும் புதன்கிழமை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சோளிங்கர் லட்சுமிநரசிம்மர் கோயில் ரோப்கார் வசதியை பொறுத்தவரை அங்கு கூடுதலாக கழிப்பறை, குடிநீர், பாதை வசதிகள் ரூ.11 கோடி உபயதாரர் நிதி மூலம் மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெறும் நிலையில் உள்ளது. பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு ரோப்கார் மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்படும்.

கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசை உச்ச நீதிமன்றமே பாராட்டியுள்ளது. அந்த வகையில், திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 660 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதுடன், வரலாற்றில் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களிலும் மாவட்ட அறங்காவலர் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தவிர, இந்து சமய அறநிலையத்துறை கோயிலுக்குத்தான் அறங்காவலர்களை நியமிக்க முடியும். அதன்படியே வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கும் அறங்காவலர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க:"தர்ம ரட்சகராக அவதாரம் எடுக்கும் ஆளுநர்" - அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details