வேலூர்: வேலூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை , திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் 56 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவினை வேலூர் சரக காவல் துணை தலைவர் எம்.எஸ்.முத்துசாமி இன்று (ஜன.5) பிறப்பித்துள்ளார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு காவல்துறையில் பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு டிஜிபி சங்கர் ஜிவால் அனைத்து மாநகர காவல் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "சொந்த ஊரிலோ அல்லது ஒரே இடத்திலோ 3 ஆண்டுகள் பணியில் இருப்பவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும், உதவி ஆய்வாளர் முதல் ஏடிஜிபி பதவி வரை உள்ளவர்களில், ஜூன் 30ஆம் தேதிக்குள் 3 ஆண்டுகள் பணி நிறைவு அடையும் அதிகாரிகள் பட்டியலைத் தயாரித்து தலைமை அலுவலகத்திற்கு ஜனவரி 10ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கணினி வேலைக்காகவும், பயிற்சிக்காகவும், சிறப்பு பிரிவுக்காகவும் பணி அமர்த்தபட்டவர்களைப் பணியிட மாற்றத்திற்கு உட்படுத்த தேவையில்லை எனவும் டிஜிபி சங்கர் ஜிவால் குறிப்பிட்டிருந்தார்.
தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது எனவும், நீதிமன்றங்களில் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ள அதிகாரிகளைத் தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது எனவும், ஓய்வு பெற்று பணி நீட்டிப்பு பெற்ற காவல் துறை அதிகாரிகளையும் பயன்படுத்தக் கூடாது" என சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், வேலூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் 56 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவினை வேலூர் சரக காவல் துணை தலைவர் எம்.எஸ்.முத்துசாமி இன்று (ஜன.4) பிறப்பித்துள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர்கள் உடனடியாக தாங்கள் நியமிக்கப்பட்டுள்ள காவல் நிலையங்களில் பணியில் சேரவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அண்ணா பல்கலைக்கழகம் வானூர்தி துறையின் 'டிரோன்' கண்டுபிடிப்பிற்கு மத்திய அரசு காப்புரிமை!