தமிழ்நாடு

tamil nadu

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: சொர்க்கவாசல் திறப்பு..வானைப் பிளந்த 'கோவிந்தா..கோவிந்தா' கோஷம்..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 23, 2023, 7:33 AM IST

Vaikuntha Ekadashi 2023: திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Srirangam Sorgavasal Thirappu vaikunta ekadasi
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு

திருச்சி: 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், 'பூலோக வைகுண்டம்' என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் வருடம் தோறும் நடைபெறும் விழாக்களில், மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் வைகுண்ட ஏகாதசி விழாவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக இன்று நடைபெற்றது.

கடந்த டிசம்பர் 12ஆம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 13ஆம் தேதி பகல் பத்து விழா தொடங்கியது. பகல் பத்து பத்தாவது நாளான நேற்று நம் பெருமாள் மோகினி அலங்காரத்தில் காட்சியளித்தார்

வைகுண்ட ஏகாதசி விழா நாட்களில் நம்பெருமாள்(உற்சவர்) மூலஸ்தானத்திலிருந்து பல்வேறு அலங்காரங்களில் ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் கோயில் பிரகாரங்களில் வலம் வந்து பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான 23ஆம் தேதி இன்று அதிகாலை 3 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 4 மணியளவில் விருச்சிக லக்னத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை, வைர அபயஸ்தம் உட்பட பல்வேறு திரு ஆபரணங்கள் அணிந்து திருச்சுற்றில் உள்ள தங்க மரத்தை சுற்றி வந்து பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக கடந்து வந்தார்.

அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்தி கோஷமிட்டவாறு பரமபத வாசலைக் கடந்துச் சென்றனர். பின்னர் நம்பெருமாள் பக்தர்களுக்கு நேரடியாகச் சென்று காட்சி தரும் திருகொட்டகை பிரவேசம் கண்டருளினார். ஆயிரங்கால் மண்டபத்திற்கு வந்தடைந்து பக்தர்களுக்கு பொதுஜன சேவை கண்டருளினார்.

ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நம்பெருமாளை இன்று இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்று அடைகிறார். சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை நீண்ட வரிசையில் நின்று பக்திபரவசத்துடன் சேவித்து வருகின்றனர்.

அதனை தொடர்ந்து வரும் டிசம்பர் 29ஆம் தேதி கைத்தல சேவையும், 30ஆம் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி வைபவமும் நடைபெறும். அப்போது நம்பெருமாள் தங்க குதிரையில் வலம் வருவார். வரும் 2024 ஜனவரி மாதம் 1ஆம் தேதி தீர்த்தவாரி நம்பெருமாள் கண்டருளுவார். 2ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுறும்.

வைகுண்ட ஏகாதசி விழாவில் திருச்சி மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் பாதுகாப்பிற்காக வெளியூர்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பொதுமக்களுக்கு பக்தர்களுக்கு தேவையான குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மாநகராட்சி உடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. நம்பெருமாள் சொர்க்க வாசலை கடந்து ஆயிரம்கால் மண்டபத்திற்கு சென்றதற்கு பிறகு தான் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: நெருங்கும் கிறிஸ்துமஸ்.. திருச்சியில் களைகட்டும் அலங்காரப் பொருட்கள் விற்பனை!

ABOUT THE AUTHOR

...view details