தமிழ்நாடு

tamil nadu

Leo Movie; திருச்சியில் மாஸாக நடனமாடி ரசிகர்கள் கொண்டாட்டம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 11:13 AM IST

Leo Movie Release at trichy: திருச்சியில் நடிகர் விஜய்யின் லியோ திரைப்பட வெளியீட்டை ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திருச்சியில் லியோ திரைப்படம் வெளியீடு: பட்டாசுகள் வெடித்து, நடனமாடி ரசிகர்கள் கொண்டாட்டம்..
திருச்சியில் லியோ திரைப்படம் வெளியீடு: பட்டாசுகள் வெடித்து, நடனமாடி ரசிகர்கள் கொண்டாட்டம்..

திருச்சியில் லியோ திரைப்படம் வெளியீடு: பட்டாசுகள் வெடித்து, நடனமாடி ரசிகர்கள் கொண்டாட்டம்..

திருச்சி:தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களான த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இதற்கு முன்பு வெளியான படத்தின் அப்டேட்கள், பாடல்கள் மற்றும் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், தமிழக அரசின் சார்பில் படத்திற்கு சிறப்பு காட்சி திரையிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், காலை 4 மணி காட்சிகள் கேட்டு பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடினாலும், அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை.

அதேபோல் காலை 7 மணி காட்சி கேட்டு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தபோதும், அதற்கும் தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில், இன்று லியோ படம் வழக்கம்போல காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. லியோ கடந்த சில வாரங்களாகவே பல சர்ச்சைகளில் சிக்கியது. புகை பிடிப்பதை ஊக்குவிப்பது தொடர்பாக படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விமர்சிக்கப்பட்ட நிலையில், டிரெய்லரில் விஜய் ஆபாச வார்த்தை பேசியது தொடர்பாக சர்ச்சை வெடித்தது.

இதையும் படிங்க: தமிழகத்தை தவிர உலகெங்கிலும் வெளியானது லியோ!

இதற்கிடையில், படத்தின் ப்ரீ-புக்கிங் மட்டும் சுமார் 34 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஜெயிலரின் முதல் நாள் வசூலை முறியடித்து இப்படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளே ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் லியோ திரைப்படம் காலை 9 மணிக்கு திரையிடப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் கொண்டாடினர். அந்த வகையில், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சோனா- மீனா திரையரங்கில், விஜய் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து, நடனம் ஆடி தங்களுடைய கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

படம் பார்க்க வரும் ரசிகர்கள் முழுமையான சோதனைக்குப் பின்னரே திரையரங்கிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். முன்னதாக திரையரங்கம் வெளியே நடனமாடிய விஜய் ரசிகர்களிடம், திரையரங்கில் பணிபுரியக் கூடிய பணியாளர்கள் நடனம் ஆடக்கூடாது என அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்களிடம் கேட்டபோது, “லியோ திரைப்படத்திற்கு மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது தவறு. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த கட்டுப்பாடுகள், சர்ச்சைகள்தான் லியோ படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. நிச்சயமாக இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: Leo advance booking: 16 லட்சம் டிக்கெட் விற்று ஜவான் சாதனையை முறியடித்த லியோ!

ABOUT THE AUTHOR

...view details