திருச்சி: திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும் பணி (Integrated Bus Terminal), மற்றும் பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம் (Multi Utility Facilities Centre) ரூ.243.78 கோடி, கனரக சரக்கு வாகன முனையம் கட்டுமானப் பணி மற்றும் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.106.20 கோடி என மொத்தம் ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தின் மொத்த பரப்பளவு 40.60 ஏக்கராகும். இந்த பேருந்து முனையத்தில் புறநகர் பேருந்து நிறுத்த தடங்கள் 124, நீண்ட நேர பேருந்து நிறுத்த தடங்கள் 142, குறைந்த நேரப் பேருந்து நிறுத்த தடங்கள் 78, நகரப்பேருந்து நிறுத்த தடங்கள் 60 என மொத்தம் 404 பேருந்து நிறுத்த தடங்கள் உள்ளது.
மேலும் இந்த பேருந்து முனையத்தில் 70 கடைகளும், 556 நான்கு சக்கர வாகன நிறுத்தங்களும் அமைய உள்ளது. 1125 இரண்டு சக்கர வாகன நிறுத்தங்களும், 350 ஆட்டோ நிறுத்தங்களும், நகரும் படிக்கட்டுகள் (escalator) வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.