தமிழக அரசுக்கு எதிராக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் திருச்சி:தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் போராட்டக் குழு சார்பாக வருகின்ற 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும், தொடர்ந்து 29ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் எனவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் போராட்டக் குழு அறிவித்துள்ளது.
சிப்காட்க்கு எதிராக போராட்டம் நடத்திய விவசாயிகளை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு விவசாய சங்கங்களின் சார்பாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், விவசாயிகள் அய்யாக்கண்ணு, வழக்கறிஞர் ஈசன், கடலூர் ரவீந்திரன், தீட்சிதர் பாலு, மதுரை ராமன் உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், “மத்திய அரசின் வேளாண் சட்டத்தைக் காட்டிலும் மிகக் கொடுமையான நில ஒருங்கிணைப்புச் சட்டம் (2023)-ஐ தமிழக அரசு எந்த ஒரு விவாதமுமின்றி நிறைவேற்றியிருப்பது விவசாயிகளுக்கு மிகப்பெரும் ஆபத்தானது.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறை பக்கபலமாக செயல்பட வேண்டும் - அமைச்சர் மெய்யநாதன்
விவசாயிகளுக்கு எதிராக குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுத்துள்ளது, மு.க.ஸ்டாலின் அரசு. இப்போது குண்டர் சட்டத்தை அரசு திரும்பப் பெற்றுள்ள நிலையில், விவசாயிகள் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திராவிட மண் என பேசும் மு.க.ஸ்டாலின் அரசு கொடுமையை நடத்துகிறது. எத்தனையோ மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால் யார் மீதும் குண்டர் சட்டம் இதுவரை போடப்பட்டதில்லை. தமிழகத்தில் இது போன்று நடப்பது ஏற்புடையதல்ல.
விவசாயிகளின் வேதனைக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறப்பட வேண்டும். நிபந்தனை இல்லாமல் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். அமைச்சர் எ.வ.வேலு, தனது அறிக்கையை திரும்பப் பெற வேண்டும். அவருடைய கருத்து தவறானது, கண்டிக்கத்தக்கது. இந்த அறிக்கையே, திமுக அரசு விவசாயிகளுக்கு எதிரானது என்பதுபோல் உள்ளது.
விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயலாற்றும் அமைச்சர் எ.வ.வேலு உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். மேலும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். வருகிற 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டமும், 29ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற உள்ளது. விவசாயிகளின் மீதான விரோதப்போக்கு தொடர்ந்தால், அதன் விளைவுகள் தேர்தல் களத்தில் எதிரொலிக்கும், களத்தில் எதிர்கொள்வோம்” என பேசினார்.
மேலும் பேசிய விவசாயி விமலநாதன், தமிழக முதலமைச்சர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து விமர்சன பதிவு - அதிமுக நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்!