தமிழ்நாடு

tamil nadu

ஊரடங்கால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ரூ.350 கோடி பாதிப்பு!

By

Published : May 21, 2020, 1:05 PM IST

பாதிப்படைந்த தேங்காய் எண்ணெய் உற்பத்தி
பாதிப்படைந்த தேங்காய் எண்ணெய் உற்பத்தி

திருப்பூர்: ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் தேங்காய் உலர்களங்களும், எண்ணெய் ஆலைகளும் செயல்படாமல் உள்ளதால், உற்பத்தியாளர்களுக்கு 350 கோடி ரூபாய் வரை விற்பனை பாதித்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளக்கோவில், முத்தூர், மூலனூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது 500க்கும் மேற்பட்ட தேங்காய் உலர்களங்கள் செயல்பட்டுவருகின்றன. இங்கு தேங்காய் பருப்பு உலர்த்தப்பட்டு (கொப்பரை) காங்கேயத்தில் உள்ள 80க்கும் மேற்பட்ட ஆலைகள் மூலம் எண்ணெயாக பிழிந்து எடுக்கப்படுகிறது.

இதேபோல் வட மாநிலங்களுக்கு அனுப்பப்படும் கொப்பரை உற்பத்தியும் பாதிப்படைந்துள்ளது. தேங்காய் எண்ணெய் கேரளா உள்பட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு தினமும் 20 டேங்கர் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுவந்தது. இதனால் தினமும் 4 முதல் 6 கோடி ரூபாய் அளவில் வியாபாரம் நடைபெற்றது.

ஆனால், கடந்த 48 நாள்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், காங்கேயத்திலிருந்து தேங்காய் எண்ணெய் அனுப்புவது தடைபட்டுள்ளது. ஒரு சில நிறுவனம் மட்டும் குறைந்த அளவில் எண்ணெய் உற்பத்தி செய்து, தினமும் சுமார் 5 டேங்கர் லாரிகளில் மட்டும் அனுப்பிவருகின்றனர். இதனால் காங்கேயம் சுற்றுவட்டாரத்தில் தேங்காய் பருப்பு உற்பத்தி, தேங்காய் எண்ணெய் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 48 நாள்களில் காங்கேயத்தில் வியாபாரம் நடைபெறாததால், தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சுமார் 350 கோடி ரூபாய் அளவில் இழப்பைச் சந்தித்துள்ளனர். மேலும், இதில் 75 ஆயிரம் பணியாளர்கள் வேலை இழந்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிப்படைந்த தேங்காய் எண்ணெய் உற்பத்தி

தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் மூலம் குறைந்த அளவே உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் முழு வீச்சில் உற்பத்தி தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என உற்பத்தியாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: வாழ்வாதாரம் பாதிப்பு: நிவாரணம் கேட்கும் பூட்டு உற்பத்தி தொழிலாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details