தமிழ்நாடு

tamil nadu

வாணியம்பாடி வாரச்சந்தையை நவீனப்படுத்தும் பணிகள் தீவிரம்

By

Published : Sep 18, 2020, 8:37 PM IST

திருப்பத்தூர்: கரோனா தொற்றால் 5 மாத காலமாக மாற்று இடங்களில் இயங்கிவந்த வாரச்சந்தை, உழவர் சந்தை உள்ளிட்டவை நவீனமயமாக்கப்பட்டு விரைவில் இயங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வாணியம்பாடி வாரச்சந்தையை நவீனப்படுத்தும் பணிகள் தீவிரம்
வாணியம்பாடி வாரச்சந்தையை நவீனப்படுத்தும் பணிகள் தீவிரம்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சந்தைமேடு பகுதியில் வாரச்சந்தை, உழவர் சந்தை, காய்கறிச்சந்தை, மாட்டுச்சந்தை ஆகிய சந்தைகளும், தேநீர் கடை, உணவகம், ஆவின் பாலகம், ஆகியவை இயங்கிவந்தன. இப்பகுதியில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடை நடத்திவந்தனர்.

இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் வாரச்சந்தை, காய்கறிச்சந்தை உள்ளிட்ட அனைத்துச் சந்தைகளும், புதூர் பகுதியில் உள்ள கூடுதல் பேருந்து நிலையம், தனியாருக்குச் சொந்தமான இடங்களில் தற்காலிகமாகச் சந்தைகள் மாற்றப்பட்டன.

புதிய இடங்களுக்கு மாற்றப்பட்ட காய்கறிச்சந்தை, வாரச்சந்தைகளில் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் நடைபெறாமல், கூடுதல் பேருந்து நிலையத்தில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுவந்ததால், பழையபடி சந்தைமேடு பகுதியிலேயே காய்கறிச்சந்தை, வாரச்சந்தை உழவர் சந்தை அமைத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என வாணியம்பாடி வியாபாரிகள் சார்பில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் சிவனருளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து பழையபடி வியாபாரிகள் கடைகள் அமைத்துக்கொள்ள ஏற்பாடு செய்யும்படி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணித்திற்கு மாவட்ட ஆட்சியர் சிவனருள் உத்தரவிட்டார்.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் சென்ன கிருஷ்ணன் கூறும்போது, "சந்தைமேடு பகுதியில் 300-க்கும் மேற்ப்பட்ட கடைகள் செயல்பட்டுவந்தன. இப்பகுதியில் மீண்டும் வியாபாரிகள் கடைகளை அமைத்துக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

வியாபாரிகள் அதிகாலை 3 மணி முதல் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்வதால், மின்விளக்கு வசதி, கழிவறை, குடிநீர், உணவகம் உள்ளிட்ட வசதிகள், ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றன. நடைபாதை வியாபாரிகள் வசதிக்காக சிமெண்ட் கற்கள், புதைக்கும் பணிகளும், சந்தையை நவீனப்படுத்தும் பணிகளும் நடந்துவருகின்றன.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தகுந்த இடைவெளியுடன், கடைகள் அமைக்கப்பட்டுவருகின்றன. இப்பணிகள் விரைவாக முடிக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இப்பணிகள் முழுமையடைந்தவுடன், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் வியாபாரிகள் கடைகளை அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details