தமிழ்நாடு

tamil nadu

வாணியம்பாடி அருகே 2 பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. மீட்புப் பணியிலிருந்த காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 12:08 PM IST

Vaniyambadi Bus accident: வாணியம்பாடி அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த தலைமைக் காவலர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

head constable who involved in the rescue operation in Vaniyambadi bus accident died of heart attack
விபத்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் பலி

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி 6 பேர் உயிரிழந்த நிலையில், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, செட்டியப்பனூர் கூட்டுச்சாலை பகுதியில் உள்ள சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (நவ.11) அதிகாலை, பெங்களூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்புறம் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநரான உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ஏழுமலை, வாணியம்பாடியைச் சேர்ந்த தனியார் பேருந்தின் கிளீனர் முகமது பைரோஸ், சென்னையைச் சேர்ந்த கிருத்திகா ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் உடனடியாக அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அவர்களை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சித்தூர் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், தனியார் பேருந்தின் ஓட்டுநர் ஆகியோர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைத்தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக 27 பேர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்குச் சிகிச்சை பலனின்றி சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த ராஜூ என்பவர் உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது.

இதனையடுத்து, வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு விபத்தில் சிக்கிய பேருந்துகளைச் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர் செய்தனர். இந்நிலையில், பேருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டிருத்த வாணியம்பாடி கிராமிய தலைமைக் காவலர் முரளி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அவரை மீட்ட சக காவலர்கள், சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். பேருந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் மாரடைப்பால் உயிரிழந்த நிகழ்வு காவல்துறையினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வாணியம்பாடி அருகே 2 பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து: 6 பேர் பலி.. 40க்கு மேற்பட்டோர் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details