தமிழ்நாடு

tamil nadu

கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து சுமார் ரூ.1 கோடி மோசடி - சிக்கிய நகை மதிப்பீட்டாளர்!

By

Published : Jun 25, 2023, 12:00 PM IST

தூத்துக்குடி மூக்குப்பீறி கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடிக்கு முக்கிய காரணமான வங்கியின் நகை மதிப்பீட்டாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

loan Fraud
கூட்டுறவு

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் குரும்பூர் பள்ளிவாசல் தெருவில் மூக்குப்பீறி கூட்டுறவு நகர வங்கியின் குரும்பூர் கிளை உள்ளது. இதன் தலைவராக நாலுமாவடி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பிரபாகரன் உள்ளார். சேதுக்குவாய்தானைச் சேர்ந்த ஜெயசிங் கிறிஸ்டோபர் மேலாளராகவும், குரும்பூர் அருளானந்தபுரத்தைச் சேர்ந்த ராஜசேகர் நகை மதிப்பீட்டாளராகவும் உள்ளனர். இந்த வங்கியில், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கணக்கு வைத்துள்ளனர்.

இந்த வங்கியில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டுறவு சங்கங்களின் கள அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதிகாரிகள் வங்கிக் கணக்குத் தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நகைகளை ஆய்வு செய்தபோது, 869 பேர் நகைக்கடன் பெற்றுள்ளது தெரிய வந்தது.

இந்த நகைகளை சோதனை செய்தபோது 36 பைகளில் 388 சவரன் போலி நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், போலி நகைகளை வைத்து ஒரு கோடியே 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருப்பதும் தெரியவந்தது. இது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து இந்த மோசடி குறித்து கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குநர் லதா, துணைப் பதிவாளர் சந்திரா, சார் பதிவாளர் பொன்செல்வி ஆகியோர் கடந்த இரண்டு நாட்களாக தொடர் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் நகை மதிப்பீட்டாளர், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 36 பேரின் வங்கிக்கணக்கில், சுமார் 388 சவரன் போலி நகைகளை அடகு வைத்து மோசடியாக 1.06 கோடி ரூபாய் கடன் பெற்றது தெரிய வந்தது.

இது தொடர்பாக, வங்கித் தலைவர் பிரபாகரன், மேலாளர் ஜெயசிங் கிறிஸ்டோபர், காசாளர், நகை மதிப்பீட்டாளர் ராஜசேகர் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் நகை மதிப்பீட்டாளர் ராஜசேகர், போலி நகைகளை கொண்டு மோசடியாக கடன் பெற்றதை ஒப்புக்கொண்டார்.

மேலும், இந்தப் பணம் முழுவதையும் உடனடியாக வங்கியில் செலுத்தி விடுகிறேன் என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக நகை மதிப்பீட்டாளர் ராஜசேகர் நேற்று 50 லட்சம் ரூபாயினை வங்கியில் ரொக்கமாக செலுத்தினார். 49 லட்சம் ரூபாய்க்கு காசோலை கொடுத்துள்ளார். மீதமுள்ள 7 லட்ச ரூபாக்கு வங்கி ஊழியர்களின் பிஎஃப் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

ராஜசேகர் காசோலையாக கொடுத்த தொகையை நாளை(ஜூன் 26) வங்கிக் கணக்கில் செலுத்திய உடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்கு உடந்தையாக இருந்த ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'கணவன் சம்பாதிக்கும் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு உள்ளது' - உயர் நீதிமன்றம் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details