ETV Bharat / state

'கணவன் சம்பாதிக்கும் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு உள்ளது' - உயர் நீதிமன்றம் அதிரடி!

author img

By

Published : Jun 24, 2023, 7:59 PM IST

சென்னை உயர் நீதிமன்றம் கணவன் பார்க்கும் எட்டு மணி நேர வேலையை இல்லத்தரசிகள் குடும்பத்தை கவனிக்கும் 24 மணி நேரத்துடன் ஒப்பிட முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும், கணவன் சம்பாதிக்கும் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு உள்ளது என அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

husband and wife equal
கோப்புபடம்

சென்னை: குடும்பத்தையும், வீட்டையும் நிர்வகிக்கும் தலையாய பொறுப்பினை இல்லத்தரசிகளே பெரும்பாலும் மேற்கொள்கின்றனர். கணவன், குழந்தைகள் மற்றும் வீட்டையும் பராமரிக்கும் பெண்கள் ஒரு குடும்பத்தின் கண்களாக இருக்கின்றனர். அவர்களின் மனநிலை நலமாக இருக்க வேண்டியது அவசியம். குடும்பத்தின் மகிழ்ச்சியும் இல்லத்தரசிகளின் மகிழ்ச்சியைச் சார்ந்தே உள்ளது. இவ்வாறு இருக்கும்போது சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவை அறிவித்துள்ளது.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றிய கண்ணையன் நாயுடு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில் அவர் தான் வெளிநாட்டில் கிடைத்த வேலையில் சம்பாதித்து அனுப்பி வைத்த தொகையைப் பயன்படுத்தி கணவன் பெயரில் மனைவி வாங்கிய சொத்துக்களில் மனைவிக்கு உரிமையில்லை எனக் கூறி, கணவன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

அதில், 'தான் வெளிநாட்டில் 1983 முதல் 1994 வரை சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்துகள் அனைத்தும் தனக்கு மட்டுமே அனுபவிக்க உரிமை உள்ளது. அதில் யாரும் உரிமை கோர முடியாது. ஆனால், கீழமை நீதிமன்றம் தனது மனைவிக்கும் பங்கு உள்ளது எனத் தீர்ப்பளித்துள்ளது. அதனால், கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்' என அந்த மேல்முறையீட்டில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கணவன் சம்பாதிப்பதும், மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தைக் கவனிப்பதும் பொதுவானது என்றார். குடும்பத்தை மனைவி கவனிப்பதால் தான் கணவரால், தனது பணியை முழு மன நிறைவோடு செய்ய முடிகிறது என்ற அவர் கணவனின் சம்பாத்தியத்தில் வாங்கும் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு பெற உரிமை உள்ளது எனக் கூறியுள்ளார்.

கணவன், தனது மனைவிக்கு அன்பாக வாங்கித்தரும் நகைகள் மற்றும் புடவைகள், பரிசுப் பொருட்கள் அனைத்தும் அவனது விருப்பத்தின் பேரில் பரிசளிக்கப்படுகின்றன. மேலும் அதைத் தான் சம்பாதித்து வாங்கியது என்பதால் அதை மீண்டும் கேட்க உரிமையில்லை. கணவன் தான் மட்டுமே சம்பாதித்தது என்பதற்காக மனைவிக்கான பாதி உரிமையை மறுக்கமுடியாது என நீதிபதி தெரிவித்தார்.

மேலும் இல்லத்தரசிகள் தங்கள் குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிப்பதன் மூலம், குடும்ப மருத்துவர் போல, 24 மணி நேரமும், விடுமுறையின்றி இல்லத்தரசிகள் மேற்கொள்ளும் பணியை சம்பாத்தியத்திற்காக கணவன் பார்க்கும் எட்டு மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கணவனும், மனைவியும் குடும்ப வாகனத்தின் இரட்டை சக்கரங்கள் எனக் குறிப்பிட்ட நீதிபதி, கணவன் சம்பாத்தியம் மூலம் தன் பங்கை வழங்கினால், குடும்பத்தை கவனிப்பதன் மூலம் மனைவி தன் பங்களிப்பை வழங்குகிறார். அதனால் சொத்தில் மனைவிக்கும் சம பங்கு பெற உரிமை உள்ளது என உத்தரவிட்டுள்ளார்.

இல்லத்தரசிகள் குடும்பத்தை நேரடியாகவோ? மறைமுகமாகவோ? கவனித்து தான் அளிக்கும் பங்களிப்பை அங்கீகரித்து எந்த சட்டமும் இதுவரை இயற்றப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, அந்தப் பங்களிப்பை நீதிமன்றம் அங்கீகரிப்பதற்கு எந்தச் சட்டமும் தடை விதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சென்னையில் குடிநீர் வரி காலதாமதமாக செலுத்தும்போது வசூலிக்கும் அபராதம் குறைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.