தமிழ்நாடு

tamil nadu

"உங்களுக்கு வந்தால் தக்காளி.. எங்களுக்கு வந்தால் ரத்தமா?" - அமைச்சர் கே.என்.நேரு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 1:10 PM IST

Updated : Oct 9, 2023, 5:02 PM IST

KN Nehru slammed: தூத்துக்குடி மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

KN Nehru slammed
கே.என்.நேரு

நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

தூத்துக்குடி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 58.67 கோடி மதிப்பில் பேருந்து நிலையம், 28.87 கோடி மதிப்பில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) தொடர்பான பூங்கா உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 200 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களை மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

பின்னர், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி தேர்ந்தெடுத்ததற்குப் பின் தொகுதியில் இருக்கக்கூடிய மூளை, மூடுக்கெல்லாம் சென்று மக்கள் குறைகளை அறிந்து உடனடியாக நிறைவு செய்யக்கூடிய ஒரு எம்.பியாக உள்ளார்.

சென்னையில் சிறிய மழை பெய்தாலும், தூத்துக்குடியில் மழை பெய்து தண்ணீர் வந்து விடுமோ என்று அச்சம் கொள்வார். அந்த அளவிற்கு தன்னுடைய எண்ணம் செயலில் தூத்துக்குடி தொகுதி வளம் பெற வேண்டும். இந்த தொகுதிக்கு இருக்கக்கூடிய பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும் என ஆர்வம் மிக்கவர்.

தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் ஒரு கேந்திரமாக விளங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள பர்னிச்சர் பூங்காவில் தொழில் நிறுவனங்கள் வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் மிகப்பெரிய வேலை வாய்ப்புகள் உருவாகும். அது மட்டுமன்றி தூத்துக்குடி மாவட்டத்தில் பசுமை அமோனியா திட்டம் உள்ளிட்ட பல்வேறு தொழில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது’ என்று கூறினார்.

பின்னர், நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்,‘நேற்றைய தினம் டெல்லிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சென்றது நாம் வரி வசூல் (ஜிஎஸ்டி) செய்து கொடுத்தை வாங்குவதற்கு தான். நாங்கள் வரிவசூல் செய்து கொடுத்ததை கேட்பதற்கு டெல்லிக்குப் போனால் எங்கள் பணத்தை நீங்கள் வைத்துக் கொண்டு உங்கள் நோட்டீசை (மோடி படம் பேருந்து நிலையத்தில் ஒட்டியது தொடர்பாக) கொண்டு ஓட்டுகிறீர்கள்.

அது எந்த வகையில் நியாயம், வந்தே பாரத் ரயில் எல்லாம் விடுகிறீர்கள். நாங்களா அதில் பயணம் செய்கிறோம். நீங்களே விட்டுக்கிறீங்க. நீங்களே போறீங்க. ஆனால் நாங்க ஒரு வேலை செஞ்சா அதுல வந்து நீங்க நோட்டீஸ் ஒட்ட என்ன காரணம்?

இப்போது உள்ள எதிர்கட்சிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நாங்க தான் கொண்டு வந்தோம் என்கிறீர்கள். சென்னையில் இருக்கின்ற ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அன்றைய காலக்கட்டத்தில் 1996 ஆம் ஆண்டு 200 கோடி ரூபாய் மதிப்பில் கருணாநிதி கட்டினார். ஆனால் பணிகள் முடிந்து திறக்கப் போகும்போது ஜெயலலிதா திறந்தார். நாங்கள் கட்டினது திறக்க கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை.

ஆசியாவில் மிகப்பெரிய கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டியது கருணாநிதி. ஆனால் போர்டு வைத்தது அதிமுக, உங்களுகேன்றால் தக்காளி எங்களுகேன்றால் ரத்தமா இது எப்படி சரியாகும். ஐந்தாண்டுக்கு ஒரு முறை மாறி, மாறி ஆட்சி வரும். அப்போது வருகிறவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது.

மேலும், பேசுகையில் கனி (கனிமொழி) கனிவோடு, பணிவோடு இருப்பவர். அவருக்கு கோபம் வந்து யாரும் பார்த்ததில்லை. ஆனால் நாங்கள் பார்த்திருக்கின்றோம். காரியத்தை எடுத்தால் தலைவரைப் போல முடிக்கிற வரை விடாமல் ஓயமாட்டார். என்று கூறினார்.

மேலும், உள்ளாட்சித் துறைக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 14,000 கோடி ரூபாய் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து நகராட்சி மாநகராட்சிகளிலும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு மட்டும் ஐந்தாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

சாலை விதி, கழிவுநீர், தெரு விளக்கு போன்ற அனைத்து வசதிகளும் சரியாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் அனைத்து பணிகளும் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சித் துறை இயக்குநர் சிவராசு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை! காவிரி விவகாரத்தில் முக்கிய முடிவு

Last Updated : Oct 9, 2023, 5:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details