தமிழ்நாடு

tamil nadu

கோரம்பள்ளம் குளக்கரையில் உடைப்பு... வெள்ள அபாயத்தில் தூத்துக்குடி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 11:32 AM IST

Updated : Dec 18, 2023, 12:59 PM IST

Thoothukudi Rain Update: கோரம்பள்ளம் குளக்கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடி நகரமே வெள்ள அபாயத்தில் மூழ்கியுள்ளது, இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோரம்பள்ளம் குளக்கரையில் உடைப்பு
கோரம்பள்ளம் குளக்கரையில் உடைப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாகப் பெய்து வரும் தொடர் மழையினால் தூத்துக்குடி மாநகரை ஒட்டி உள்ள பெரிய குளமான கோரம்பள்ளம், உப்பாத்து ஓடை ஆகியவற்றில் உடைப்பு ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகத் தூத்துக்குடி மாநகர பகுதியில் மழை நீரானது வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஏற்கனவே தொடர்ந்து பெய்து வரும் மழையால், குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் குளங்களில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக அதிகளவிலான வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது. ஆதிபராசக்தி நகர், கதிர்வேல் நகர், முத்தமாள் காலனி, கதிரேசன் நகர், போல் பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நேரானது சுமார் மூன்று அடி முதல் எட்டு அடி வரை தேங்கியுள்ளது.

இதன் காரணமாகப் பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது. இந்த நிலையில் மக்கள் வீடுகளில் இருக்க முடியாத சூழ்நிலையில், வீடுகளை விட்டு வெளியே வருவதற்கும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பேசுகையில், “பொதுமக்கள் வந்து தங்குவதற்காக 17 இடங்களில் புகலிடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்களுக்குத் தேவையான குடிநீர், ரொட்டி போன்ற வசதிகள் தற்காலிகமாகச் செய்யப்பட்டுள்ளன. மேலும், அவர்கள் விருப்பப்பட்டால் அந்த புகலிடங்களில் தங்கிக் கொள்ளலாம். இல்லையென்றால் விருப்பப்பட்ட தங்களுடைய உறவினர் வீடுகளுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

மேலும், குடியிருப்புகளில் இருந்து வெளியே வர சிரமப்படும் மக்களைப் படகுகள் மூலம் மக்களை வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகத் தூத்துக்குடியில் உள்ள பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து, வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளும் நிரம்பி உள்ளதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தற்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், தூத்துக்குடியில் உள்ள கோரம்பள்ளம் குளக்கரையில் உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்புப் பகுதியை நோக்கி வெள்ளம் நீர் பெருக்கெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்குச் செல்லவோ கூடாது என முன்னரே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது கோரம்பள்ளம் குளக்கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடி நகரமே வெள்ள அபாயத்தில் மூழ்கியுள்ளது. ஆகையால் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க: நெல்லையை மிரட்டும் கனமழை.. வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மாநகரம்.. அத்தியாவசிய பொருட்கள் மதுரையிலிருந்து வரவழைக்க ஏற்பாடு..

Last Updated :Dec 18, 2023, 12:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details