தமிழ்நாடு

tamil nadu

ஒட்டப்பிடாரம் அருகே திமுக பிரமுகரை அரிவாளால் வெட்டிய திமுகவினர் - நடந்தது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 12:27 PM IST

DMK person assaulted issue in thoothukudi: தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் திமுக கிளைச் செயலாளர் மாரிஸ்குமார் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக கிளை செயலாளர் மாரிஸ்குமார்
திமுக கிளை செயலாளர் மாரிஸ்குமார்

தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் அருகே உள்ள புதூர் பாண்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பரது மகன் மாரிஸ்குமார் (30). இவர் புதூர் பாண்டியபுரம் திமுக கிளைச் செயலாளராக உள்ளார். மேலும் கச்சேரிதளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பரது மகன் கண்ணன் (27), ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளராக உள்ளார்.

இந்த நிலையில், கடந்த நவம்பர் 25 அன்று தெற்கு வீரபாண்டியபுரம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டடம் மற்றும் நிழற்குடை திறக்கப்பட்ட செய்தியானது, நேற்று (நவ.27) பிரபல தினசரி நாளிதழில் புகைப்படத்துடன் வெளியானது. இந்தச் செய்தியில் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் இளையராஜாவின் புகைப்படம் பதிவாகியுள்ள நிலையில், கண்ணன், இளையராஜாவின் படத்தை மறைத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து மாரிஸ்குமார், கண்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, கண்ணனுக்கும் மாரிஸ்குமாருக்கும் இடையே கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாரிஸ்குமார் ஒட்டப்பிடாரத்தில் நடைபெற்ற கபடி போட்டியை பார்த்துவிட்டு, இரவு சுமார் 10.15 மணியளவில் ஒட்டப்பிடாரத்திலிருந்து குறுக்குச்சாலையை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது கண்ணன் மற்றும் அவருடன் வந்த நபர் ஆகிய இருவரும், மாரிஸ்குமாரின் இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து சென்று, மீனாட்சிபுரம் அருகே மாரிஸ்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளனர். இதில் மாரிஸ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்து வந்த ஒட்டப்பிடாரம் போலீசார் மாரிஸ்குமாரை மீட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சம்பவம் குறித்து கண்ணன் மற்றும் அவருடன் வந்த நபர் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னை மண்ணடியில் குருவியாக செயல்பட்ட நபரின் வீட்டில் சோதனை.. கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details