தமிழ்நாடு

tamil nadu

ராகு பெயர்ச்சியை முன்னிட்டு தஞ்சை திருநாகேஸ்வரம் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 7:28 AM IST

Rahu Ketu Peyarchi: ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியானதை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சாமி கோயிலில் நடைபெற்ற இராகு பெயர்ச்சி விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Rahu Ketu Peyarchi
ராகு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

ராகு பெயர்ச்சியை முன்னிட்டு தஞ்சை திருநாகேஸ்வரம் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

தஞ்சாவூர்:நவக்கிரகங்களின் ஒன்றாக கருதப்படும் ராகு பகவானுக்கு உரிய பரிகார ஸ்தலமாக விளங்குவது, கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் கிரிகுஜாம்பிகை, பிறையணி அம்மன் உடனுறை நாகநாத சாமி திருக்கோயில்.

இங்கு ராகு பகவான் நிருதி மூலையில் தனது இரு மனைவியரான நாகவல்லி, நாகக்கன்னி ஆகியோருடன் இருக்கின்றார். தன்னிடம் வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் மங்கள ராகுவாகவும் இங்கு அருள் பாலிக்கிறார். இவருக்கு இராகு கால நேரத்தில் பாலபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலம் ராகு தோஷம், களத்திர தோஷம், புத்ர தோஷம் ஆகியவை நிவர்த்தியாகும் என்று கூறப்படுகிறது.

நிழல் கிரகமான ராகு பகவான் பின்னோக்கி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக, ஒன்னரை ஆண்டுகள் (18 மாதங்கள்) எடுத்து கொள்வார். அந்த வகையில் மேஷ ராசியில் இருந்த ராகு பகவான், நேற்று பிற்பகல் 3.40 மணிக்கு மீன ராசிக்கு பெயர்ச்சியானார். இந்த இப்பெயர்ச்சியினை முன்னிட்டு மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசியினர் பரிகாரம் செய்து கொள்வது உத்தமம் எனக் கூறப்படுகிறது.

அதற்காக கோயில் சார்பில் முதற்கட்டமாக பரிகார லட்சார்ச்சனை கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி 4 ஆம் தேதி புதன்கிழமை வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெற்றது. ராகு பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு புனிதநீர் நிரப்பிய கடங்களை ஸ்தாபித்து, விசேஷ பூஜைகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் 4 ஆம் கால யாகசாலை நிறைவில், மகா பூர்ணாஹதியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதன் பிறகு நாதஸ்வர மேள தாளம் ஒலிக்க, கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. அதே சமயம், மூலவர் ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பிறகு கடங்களில் கொண்டு வரப்பட்ட புனிதநீரை கொண்டு மகா அபிஷேகமும் நடைபெற்றது.

பிறகு, தங்க கவசம் விசேஷ மலர் மாலைகள் அலங்காரத்தில் சரியாக ராகு பெயர்ச்சி நேரமான 03.40 மணிக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் வந்து, தொடர்ந்து தரிசனம் செய்தனர். பின்னர் மாலை 6 மணிக்கு மேல் உற்சவர் ராகுபகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் புறப்பாடும் நடைபெறுகிறது.

இதனிடையே இன்று (அக்.9) திங்கட்கிழமை காலை 2 ஆம் கட்ட லட்சார்ச்சனை தொடங்கி, வரும் 11 ஆம் தேதி புதன்கிழமை வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு காலை மாலை என இரு வேளைகளும் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: Cricket World Cup 2023: உலக கோப்பையில் அதிக கேட்சுகள் பிடித்து விராட் கோலி சாதனை!

ABOUT THE AUTHOR

...view details