திருவண்ணாமலை: தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுச்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை (நவ.3) காலை முதல் தொடர்ந்து 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறைகளுக்கு கொடுக்கப்படும் ஒப்பந்தங்களில் வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு, கல்வி அறக்கட்டளை என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் 5 நாட்களாக தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்த தகவலை வருமான வரித்துறை தரப்பில் வெளியிடவில்லை.