முதியோர் உதவித் தொகை வழங்காத வங்கியைக் கண்டித்து போராட்டம் திருவண்ணாமலை: வ.உ.சி நகர்ப் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட முதியவர்கள் முதியோர் உதவித் தொகை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள எச்.டி.எஃப்.சி தனியார் வங்கிக் கிளையில் கணக்கு துவங்கப்பட்டு அந்த வங்கிக் கணக்கில் முதியோர் உதவித்தொகை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மூன்று மாதம் முதல் ஆறு மாதங்கள் வரை வங்கியில் முதியோர் உதவித்தொகை பெற முடியவில்லை எனவும் குறிப்பாக பல நபர்களுக்கு மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை முறையாக முதியோர் உதவித் தொகை வழங்காமல் முதியோர் உதவித்தொகை நிலுவையில் உள்ளதாகவும் இது குறித்து வங்கி நிர்வாகத்திடம் முறையிட்டால் சரிவர பதில் அளிக்காமல் அலைக்கழிப்பதாகவும் பாதிக்கப்பட்ட முதியவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் பல மாதமாக முதியோர் உதவித்தொகை பெற முடியாத முதியோர்கள் திருவண்ணாமலை சன்னதி தெருவில் உள்ள எச்.டி.எஃப்.சி வங்கிக் கிளையின் வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்துப் பாதிக்கப்பட்ட மூதாட்டிகள் கூறுகையில், "முதியோர் உதவித்தொகை பெறும் பொழுது 50 ரூபாய் பெற்றுக் கொண்டு பணம் எடுத்துத் தருகின்றனர்".
மேலும் வங்கி மேலாளர் 100 ரூபாய் கேட்பதாகவும் குற்றம் சாட்டிய மூதாட்டிகள், தங்களுக்கு உரிய முறையில் முதியோர் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும், தங்களுக்குத் தபால் நிலையம் அல்லது வேறு வங்கியில் கணக்கு துவங்கி நிலுவையில் உள்ள அனைத்து மாத முதியோர் உதவித்தொகையும் வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மூதாட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:ராணிப்பேட்டை அருகே நிரம்பி வழியும் தடுப்பணை.. ஆபத்தை உணராமல் குளிக்கும் மக்கள்!