தமிழ்நாடு

tamil nadu

கர்ப்பமடைந்த மாணவி மரணம்: மறைத்த தலைமையாசிரியர், வார்டன் கைது

By

Published : Jan 20, 2022, 8:24 AM IST

Updated : Jan 20, 2022, 8:59 AM IST

தலைமையாசிரியர், விடுதிக் காப்பாளர்

கர்ப்பமாக இருந்த பிளஸ்-1 மாணவி விஷம் குடித்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். கர்ப்பத்துக்கு காரணமான ஓட்டுநர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட நிலையில் இதனை காவல் துறைக்குத் தெரிவிக்காத தலைமை ஆசிரியர், விடுதிக் காப்பாளர் கைதுசெய்யப்பட்டனர்.

தி.மலை:திருவண்ணாமலை அருகே ஒரு பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி சென்னை கோவளத்தில் உள்ள ஒரு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி 11ஆம் வகுப்புப் படித்துவந்தார். திடீரென மாணவிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன்பு அவரது பெற்றோர் மாணவியை திருவண்ணாமலைக்கு அழைத்துவந்தனர். பெற்றோர் யாரும் வீட்டில் இல்லாதபோது அம்மாணவி எலி மருந்தைச் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றார்.

பக்குவமாகப் பேசிய போலீஸ்... எழுதிக் காட்டிய மாணவி

இதில் மயங்கிய அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பெற்றோர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் பரிசோதனை செய்ததில், அந்த மாணவி ஆறு மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குப் புகார் அளித்தனர். இதனையடுத்து மாணவியிடம் விசாரிப்பதற்காக மகளிர் காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது மாணவி சுயநினைவின்றி இருந்துள்ளார்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சையால் ஓரளவுக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் மாணவியால் பேச முடியவில்லை. மகளிர் காவல் துறையினர் தொடர்ந்து அவரிடம் பக்குவமாகப் பேசினர். அப்போது தன்னுடைய கர்ப்பத்துக்கு காரணமானவர் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஓட்டுநர் ஹாரிபிரசாத் (31) என எழுதிக் காட்டினார்.

ஓட்டுநருடன் பழக்கம் - மறைத்த தலைமையாசிரியர்

கைதுசெய்யப்பட்ட ஓட்டுநர்

அவர் மாணவியின் வீட்டருகே வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். விடுமுறை நாள்களில் மாணவி வீட்டுக்கு வரும்போது ஹாரிபிரசாத் அவருடன் பழகியுள்ளார். அவர் மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பமானார் என்பது விசாரணையின்போது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கர்ப்பத்துக்கு காரணமான ஹாரிபிரசாத்தை காவல் துறையினர் கடந்த 17ஆம் தேதி கைதுசெய்தனர். தொடர்ந்து மாணவி படித்த சென்னை உண்டு உறைவிட பள்ளியில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அதில் மாணவி கர்ப்பமாக இருந்தது பள்ளியின் விடுதி காப்பாளர் செண்பகவள்ளி (35), தலைமை ஆசிரியர் குமரகுருபரன் (51) ஆகியோருக்கு ஏற்கனவே தெரிந்தும் பெற்றோரிடம் அதனைக் கூறாமல் மறைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல் துறையினருக்கோ அல்லது குழந்தைகள் ஆணையத்துக்கோ தெரிவிக்கவில்லை எனத் தெரியவந்தது.

சிகிச்சைப் பலனின்றி மாணவி மரணம்

இதனால் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதாகத் தலைமை ஆசிரியர் குமரகுருபரன், விடுதிக் காப்பாளர் செண்பகவள்ளியை விசாரணைக்குப் பின்னர் காவல் துறையினர் கைதுசெய்தனர். கைதான தலைமை ஆசிரியர் குமரகுருபரன் திண்டிவனத்தைச் சேர்ந்தவராவார்.

இந்த நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தன்னை ஏமாற்றி கர்ப்பிணியாக்கியதால் அவமானம் தாங்காமல் மாணவி விஷம் குடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைமையாசிரியர், விடுதிக் காப்பாளர்

அவரது உடலைப் பார்த்து மருத்துவமனையில் பெற்றோர் கதறி அழுதது பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் அங்கிருந்தவர்கள் சோகத்துடன் காணப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மாணவனை காதலித்த பெண் ஆசிரியர் போக்சோவில் கைது

Last Updated :Jan 20, 2022, 8:59 AM IST

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details