தமிழ்நாடு

tamil nadu

திருமணத்திற்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை: ரூ.3.60 லட்சத்திற்கு விற்பனை!

By

Published : Jun 29, 2021, 9:20 AM IST

திருவண்ணாமலையில் திருமணத்திற்கு முன்பாக பெற்ற ஆண் குழந்தையை 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு, காதலியைத் திருமணம் செய்ய மறுத்த காதலன் உள்பட நான்கு பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேர்
கைது செய்யப்பட்ட நான்கு பேர்

திருவண்ணாமலை: வந்தவாசி அருகில் வசித்த 27 வயது பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் (29) என்பவரும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அப்பெண் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்குச் சென்றுள்ளார். பின்னர், அங்கேயே அவர் தங்கி வேலை செய்து வந்தார்.

இதனையறிந்த சரத்குமார் திருப்பூருக்குச் சென்று அந்த பெண்ணுடன் தங்கியுள்ளார். அப்போது இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில் அவர் கர்ப்பமானார்.

இதனால், சொந்த ஊருக்குச் செல்ல இயலாததால், சரத்குமாரின் பெற்றோர் மனோகரன் - சாந்தி ஆகியோர் அப்பெண்ணிடம் ஆறுதலாகப் பேசி சொந்த கிராமத்திற்கு அனுப்பாமல், செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா, நெல்வாய் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்க வைத்தனர். மேலும், யாருக்கும் தெரியாமல் சரத்குமாரும் அப்பெண்ணும் வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

காதலியை விரட்டிய காதலன்:

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்தால் ஊர்மக்கள் தவறாகப் பேசுவார்கள், இதனால் இந்த குழந்தையை உறவினரிடம் கொடுத்துவிட்டு பின்னர் முறைப்படி நாம் இருவரும் திருணம் செய்து கொள்ளலாம் என்று சரத்குமார், அப்பெண்ணிடம் கூறியதாகத் தெரிகிறது. இதனை நம்பி அப்பெண்ணும் தனது குழந்தையைக் காதலனிடம் கொடுத்தார்.

மூன்று மாதங்களுக்குப் பின்னர் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி பாதிக்கப்பட்ட அப்பெண், சரத்குமாரிடம் கூறியுள்ளார். ஆனால், திருமணம் செய்ய மறுத்த சரத்குமார், அப்பெண்ணை வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளார்.

இதனால் எங்கு செல்வது எனத் தெரியாமல் தவித்தபோது, தனது உறவினர் பாலாஜி வீட்டில் தங்கி வந்துள்ளார்.

குழந்தை விற்பனை:

இந்நிலையில் கடந்த மாதம் சரத்குமாருக்கு சென்னை திருப்போரூரைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு செய்வதை அறிந்த பாதிக்கப்பட்ட அப்பெண், சரத்குமார் வீட்டிற்குச் சென்று தனது குழந்தையைத் தரும்படி கேட்டுள்ளார்.

அதற்கு குழந்தையை விற்பனை செய்துவிட்டதாக சரத்குமார் தெரிவித்தார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட அப்பெண், இது குறித்து வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சரத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வந்தவாசி பெரிய காலனியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் மூலம் சென்னையைச் சேர்ந்த ஜோதி , கலைவாணி, அமுல், முனியம்மாள் ஆகியோரிடம் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்றது தெரியவந்தது.

குழந்தை விற்பனை

குழந்தை விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது:

மேலும், அந்தக் குழந்தையை அங்கிருந்து ஈரோடு பகுதியைச் சேர்ந்த நதியா, நந்தினி , ஜானகி ஆகியோரிடம் கொடுத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ஈரோடு விரைந்த காவல் துறையினர், அங்கிருந்த குழந்தையை மீட்டனர். குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்து வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொடர்ந்து, ஈரோட்டைச் சேர்ந்த நந்தினி, ஜானகி, பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் சரத்குமார், குழந்தையை விற்ற ஏழுமலை ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஜோதி, கலைவாணி, அமுல், முனியம்மா, நதியா ஆகிய ஐந்து பேரை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேர்

இதையும் படிங்க: உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details