தமிழ்நாடு

tamil nadu

திருவண்ணாமலையில் டிராக்டர் ஓட்டும் பட்டதாரி பெண்!

By

Published : Jun 30, 2023, 8:21 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணான கலைச்செல்வி, தனது குடும்பத்தின் வறுமை நிலையைப் போக்க நெல் அறுவடை இயந்திரம் மற்றும் டிராக்டர் டிரைவராகப் பணியாற்றி வருகிறார்.

குடும்பச் சூழல் காரணமாக டிராக்டர்  ஓட்டும் பட்டதாரி பெண்
குடும்பச் சூழல் காரணமாக டிராக்டர் ஓட்டும் பட்டதாரி பெண்

குடும்பச் சூழல் காரணமாக டிராக்டர் ஓட்டும் பட்டதாரி பெண்

திருவண்ணாமலை: மங்கலம் அருகே உள்ள மணிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர், ஏழுமலை. இவரது மனைவி வேடியம்மாள். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஏழுமலை ஓட்டுநராகவும், வேடியம்மாள் விவசாய கூலி தொழிலும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கும் வேண்டும் என்ற தன்னம்பிக்கையில் மகன் ராஜியை பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பும், மகளான கலைச்செல்வியை தனியார் கல்லூரியில் இளங்கலை கணிதமும் படிக்க வைத்து உள்ளனர். குடும்ப வறுமை சூழல் காரணமாக மேல்படிப்பை தொடர முடியாத ராஜி, நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில், கலைச்செல்வியும் தங்களது குடும்ப வறுமை நிலையைப் போக்க தானும் தன் அப்பா மற்றும் அண்ணனைப் போல் ஓட்டுநராக வேண்டும் என பயிற்சி மேற்கொண்டு ஆட்டோ வாங்கி ஓட்டி உள்ளார். ஆட்டோ ஓட்டுதலில் போதிய வருமானம் கிடைக்காததால், ஆட்டோவை வாங்க கடனாகப் பெற்ற பணத்தையும் அடைக்க முடியாமல் சிரமப்பட்டு உள்ளார்.

இதையும் படிங்க:சாலை வசதி இல்லாததால் பெண் உடலை டோலியில் சுமந்து சென்ற அவலம்! நடவடிக்கை எடுக்குமா அரசு?

இதனால் ஆட்டோவை விற்றுவிட்டு டிராக்டர் ஓட்ட பயிற்சி மேற்கொண்டார், கலைச்செல்வி. பின்பு, துணிச்சலாக விவசாய நிலங்களில் டிராக்டர் மூலம் ஏர் உழுதல் உள்ளிட்ட விவசாயப் பணிகளை செய்து வருமானம் ஈட்டி வருகிறார். மேலும், ஊக்கத்துடன் நெல் அறுவடை இயந்திரத்தை ஓட்டுவதற்கும் பயிற்சி மேற்கொண்டு உள்ளார். இதனால் பட்டதாரியான கலைச்செல்வி தற்போது நெல் அறுவடைப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

டிராக்டர் மற்றும் நெல் அறுவடை இயந்திரப் பணிகள் இல்லாதபோது கரும்பு வெட்டும் வேலையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்துப் பெண்களுக்கும் முன் உதாரணமாக, தங்களது குடும்ப சூழ்நிலையை மேம்படுத்த எண்ணி ஆண்களுக்கு நிகராக கரும்பு வெட்டுதல், டிராக்டர் மற்றும் நெல் அறுவடை இயந்திர ஓட்டுநராகப் பணியாற்றும் பட்டதாரி பெண்ணான கலைச்செல்வியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து பட்டதாரி பெண் கலைச்செல்வி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தனது குடும்ப வறுமை காரணமாகவே மேற்படிப்பை தொடர முடியாமல் இருப்பதாகவும், இதனால் தற்போது ஓட்டுநராகப் பணியாற்றி வருவதாகவும், மேலும் தனக்கு கல்லூரி மேற்படிப்பை தொடர வேண்டும் என்ற ஆசையும் கனவும் உள்ளதாக தன்னம்பிக்கையுடன் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க:திருவண்ணாமலை தீர்த்தக் குளம் சீரமைப்பு: தூர்வாரும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு!

ABOUT THE AUTHOR

...view details