தமிழ்நாடு

tamil nadu

நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீபத் திருவிழா!

By

Published : Jan 22, 2023, 7:55 AM IST

நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீபத் திருவிழா
நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீபத் திருவிழா ()

தை அமாவாசையை முன்னிட்டு நேற்று (ஜன.21) நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீபத் திருவிழா நடைபெற்றது.

நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீபத் திருவிழா

திருநெல்வேலி:தென் மாவட்டங்களில் புராதனமான சிறப்புமிக்க நெல்லையப்பர் கோயில், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும். இங்குச் சுவாமி, அம்பாளுக்கு என தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன. சிறப்புகள் வாய்ந்த அருள்மிகு காந்திமதி உடனுறை நெல்லையப்பா் திருக்கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு பத்ர தீபத் திருவிழா கடந்த 3 தினங்களாக நடைபெற்று வருகின்றது.

தை அமாவாசையான நேற்று (ஜன.21) மாலையில் திருக்கோயில் சாயசரட்சை பூஜை முடிந்ததும் மணி மண்டபத்தில் ஏற்றப்பட்ட தங்க விளக்கிற்கு அா்ச்சனை, ஆரத்தி நடைபெற்றது.பின்னர் சிவாச்சாரியார்கள் தங்க விளக்கினை ஊர்வலமாக நெல்லையப்பர் மூலஸ்தானத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு பூஜைகள் நடத்தப்பட்டு, அதிலிருந்து தீபம் திரு விளக்கின் மூலம் கொண்டுவரப்பட்டு, சுவாமி கோயில் தங்க கொடிமரம் முன்பு அமைந்துள்ள விளக்கில் நந்தி தீபம் ஏற்றப்பட்டது.

இதையடுத்து சுவாமி கோயில், ஸ்ரீ காந்திமதி அம்பாள் கோயில், ஸ்ரீஆறுமுகநயினார் திருக்கோயில் அமைந்துள்ள உள்சன்னதி மற்றும் வெளிப் பிரகாரங்கள் என திருக்கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் அகல் விளக்குகளை வரிசையாகவும், பல வடிவங்களிலும் ஏற்றி வைத்தனர்.

இதனால் திருக்கோயில் வளாகமே தீப ஒளியில் ஜொலித்தது. இரவில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்திலும், சுவாமி சண்முகர் தங்க சப்பரத்திலும், 63 நாயன்மார்கள் மரகேடயத்திலும் வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

இதையும் படிங்க: தை அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ABOUT THE AUTHOR

...view details