தமிழ்நாடு

tamil nadu

விபத்தில் சிக்கி செய்தியாளர் உயிரிழப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 4:51 PM IST

திருநெல்வேலியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tirunelveli journalist dies in accident Chief Minister Stalin paid Condolence
செய்தியாளர் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

திருநெல்வேலி: என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (வயது 52). இவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இவர், பணி நிமித்தமாக திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது சாலையின் குறுக்கே திடீரென நுழைந்த நாயின் மீது முத்துக்குமாரசாமி ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில் அவர் நிலைதடுமாறி அருகில் இருந்த சென்டர் மீடியனில் மோதியுள்ளார். இந்த சம்பவத்தில் அவரது தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த முத்துக்குமாரசாமிக்கு, சூர்ய கல்யாணி என்ற மனைவியும் சுப்பிரமணியன் என்ற மகனும் ஹரிணி என்ற மகளும் உள்ளனர். அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டு, வி.எம்.சத்திரம் பகுதியில் உள்ள மின் மயானத்தில் முத்துக்குமாரசாமி உடல் தகனம் செய்யப்படுகிறது.

இதற்கிடையில் செய்தியாளர் முத்துக்குமாரசாமி மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், முத்துக்குமாரசாமி குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்ச ரூபாய் வழங்கவும் அவர் உத்தரவிட்டு உள்ளார்.

ஏற்கனவே சமீபத்தில் தான் இதே திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு செய்தியாளர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது சக செய்தியாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஓமனில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்.. மீட்க வேண்டி முதலமைச்சருக்கு வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details