ETV Bharat / state

ஓமனில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்.. மீட்க வேண்டி முதலமைச்சருக்கு வீடியோ!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 1:28 PM IST

முதலமைச்சருக்கு வீடியோ அனுப்பிய ஓமன் மீனவர்கள்
முதலமைச்சருக்கு வீடியோ அனுப்பிய ஓமன் மீனவர்கள்

Fishermen in Oman: ஓமன் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவரை விடுவிக்க வேண்டியும், அவருடன் பணியில் இருந்த மற்ற மீனவர்களை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சருக்கும் வீடியோ மூலம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஓமனில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அடுத்த கோவளம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த பெதலிஸ் என்பவர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 17 மீனவர்களுடன் ஓமன் நாட்டிற்கு கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீன்பிடி தொழிலுக்குச் சென்றுள்ளார்.

இந்த மீனவர்கள் இரண்டு படகுகளில் ஓமன் நாட்டின் ஆழ் கடலில் மீன்பிடித் தொழிலை செய்து வந்துள்ளனர். அவர்கள் பிடிக்கும் மீன்களை கரைக்கு கொண்டு வந்து, இவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளரிடம் ஒப்படைத்து, அதற்குரிய சம்பளத்தை பெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில், ஓமன் நாட்டைச் சேர்ந்த அந்த நபர், இவர்களுக்கு சம்பளம் கொடுக்கும்போது ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையைப் பிடித்தம் செய்துவிட்டு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மீன்பிடித் தொழிலாளர் மற்றும் உரிமையாளர் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தங்களுக்கு முழுமையாக சம்பளம் தர மறுப்பது குறித்து, கன்னியாகுமரி கோவளத்தைச் சேர்ந்த மீனவர் பெதலிஸ் என்பவர் கேட்டதாகவும், அதற்கு அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அவரை காவல்துறையிடம் ஒப்படைத்து விடுவதாக மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெதலிஸ் மீண்டும் அந்த நிறுவன உரிமையாளரிடம் பிடித்தம் செய்த தொகை குறித்து கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், அந்த உரிமையாளர் பெதலிஸ்சை அந்நாட்டு காவல்துறையிடம் ஒப்படைத்ததாக கூறப்பட்டது.

மேலும், பெதலிசை அந்நாட்டு போலீசார் அழைத்துச் சென்று ஆறு நாட்கள் கடந்து விட்டதாகவும், இது வரையிலும் பெதலிஸ் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என அவருடன் பணிபுரிந்த மற்ற மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி, 16 மீனவர்களும் கடலுக்குச் செல்லாமல் படகிலேயே இருந்து வருகின்றனர்.

மேலும், சக மீனவர்கள் வீடியோ மூலம் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில், ஊதியத்தை கேட்ட தங்களது சக பணியாளரை, தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் சிறை வைத்துள்ளதாகக் கூறியுள்ளனர். மேலும் தங்களையும், சிறை பிடிக்கப்பட்ட சக பணியாளர் பெதலீசையும், அவரவர் சொந்த ஊர்களுக்கு அழைத்து வர அனைத்து வித நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஓமன் நாட்டில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர் பெதலிசின் மணைவி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தனது கணவரை விடுவிக்கவும், அவரோடு பணியில் இருக்கும் மற்ற மீனவர்களை பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு அழைத்து வர அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: நெமிலி அருகே மணல் மேட்டின் மீது மோதி காவலர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.