தமிழ்நாடு

tamil nadu

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: சிசிடிவி காட்சிகளை சார்-ஆட்சியரிடம் வழங்க போலீசார் மறுப்பு?

By

Published : Apr 6, 2023, 7:18 PM IST

விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், சிசிடிவி காட்சிகளை அம்பாசமுத்திரம் போலீசார் சார் ஆட்சியரிடம் வழங்க மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

cctv footages
சிசிடிவி ஆதாரம்

திருநெல்வேலி:அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் விசாரணைக் கைதிகளின் பற்களை, போலீசார் கட்டிங் பிளேயரை வைத்து பிடுங்கியதாகப் புகார் எழுந்தது. அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் தலைமையிலான போலீசாரே இதற்கு காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனின் உத்தரவின் அடிப்படையில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர், முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விக்கிரமசிங்கபுரம் காவல் தனிப்பிரிவு காவலர் போகபூமன், கல்லிடை தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.

அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் சந்திரமோகன், விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளர் பெருமாள், கல்லிடை காவல் ஆய்வாளர் ராஜகுமாரி உள்ளிட்டோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இதேபோல் வேறு சில காவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலமிடம், இதுவரை 9 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில் முகமது சபீர் ஆலம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களில் இருந்த சிசிடிவி பதிவுகள் அவரிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதே சமயம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பல் உடைப்பு சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் மார்ச் 10, 11, 13 ஆகிய தேதிகளில் மட்டும் சிசிடிவி காட்சிகள் பதிவாகவில்லை எனக் கூறி, வீடியோக்களை சார் ஆட்சியரிடம் போலீசார் வழங்க மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விசாரணைக் கைதிகளின் பற்கள் உடைக்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறைக்க, பாதிக்கப்பட்டவர்களை போலீசார் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ''கோவையில் தான் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடக்கிறது'' - தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம்

ABOUT THE AUTHOR

...view details