தமிழ்நாடு

tamil nadu

லீவு உண்டா? இல்லையா?... நெல்லையில் பள்ளி மாணவர்களை குழப்பிய மாவட்ட நிர்வாகம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 11:17 AM IST

Tirunelveli School Leave : நெல்லையில் உள்ள பள்ளிகளுக்கு ஜன.1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மாணவர் விருப்பப்பட்டால் சிறப்பு வகுப்புகள் வைத்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tirunelveli school leave Update
நெல்லையில் பள்ளி விடுமுறை

திருநெல்வேலி:கடந்த 16ஆம் தேதி முதல் இரண்டு நாட்களாக தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத பெரும் வெள்ளம் ஏற்பட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக நீர்நிலைகளில் இருந்து வெளியேறிய வெள்ள நீரால் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழில் கூடங்கள், கல்வி நிலையங்கள் போன்றவற்றை தண்ணீர் சூழ்ந்தது.

அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே நெல்லையில் மழை ஓய்ந்து 2 நாட்களாகியும் கூட நேற்று வரை பள்ளிகள் திறக்கப்படாமல் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தற்போது அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் நேரம் என்பதால் மாணவர்களின் தேர்வு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் இன்று (டிச. 22) ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மட்டும் பள்ளிகள் செயல்படும் எனவும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை எனவும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று (டிச. 21) மாலை அறிவிப்பு வெளியிட்டார். எனவே 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இன்று காலை வழக்கம் போல் பள்ளிகளுக்கு செல்ல தயாராகினர்.

ஆனால் திடீரென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்ட உத்தரவில், நெல்லை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் வரும் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக அறிவிப்பு வெளியானது. மேலும் இந்த விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளையும் வெளியிட்டு இருந்தனர்.

அதேசமயம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில், இன்று ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு அந்தந்த பகுதியில் உள்ள சூழலைப் பொறுத்து பள்ளிகள் திறந்து கொள்ளலாம் எனவும், தேவைப்பட்டால் தலைமை ஆசிரியர்கள் விடுமுறை அளிக்கலாம் என்றும் கூறியிருந்தனர். இதனால் நெல்லை மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகினர்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததே இந்த குழப்பத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இதையடுத்து இறுதியாக நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது எனவும், ஜனவரி 2ம் தேதிக்கு பிறகே அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும் என்றும், ஜனவரி 1ம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஈடிவி பாரத்திடம் பிரத்தியேகமாக தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கூறுகையில், "டெய்லர் சட்டப்படி 9 முதல் 12ம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. அதேசமயம் அந்தந்த பகுதிகளின் சுழலைப் பொறுத்து மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் எடுக்கும் முடிவெடுக்க அதிகாரம் உள்ளது. நேற்றிரவு பல இடங்களில் மழை பெய்தது. எனவே இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலங்களில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விரும்பினால் சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம்.

குறிப்பாக பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கி வருகிறது என்பதால் பல பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களே சிறப்பு வகுப்புகள் நடத்த விருப்பம் தெரிவிக்கின்றனர். எனவே அது போன்று பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. மற்றபடி ஜனவரி 1ம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் கிடையாது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் 5 நாட்களுக்கு பிறகு ரயில் சேவை...! பயணிகள் மகிழ்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details