தமிழ்நாடு

tamil nadu

பல்வீர் சிங் பற்களை பிடுங்கிய விவகாரம் - பாதிக்கப்பட்டவர்கள் நடுரோட்டில் செய்த ரவுடிசம் - சிசிடிவி வெளியீடு

By

Published : Mar 31, 2023, 7:05 PM IST

திருநெல்வேலியில் காவல் உதவி கண்காணிப்பாளர் குற்றவாளிகள் பற்களை பிடுங்கியதாக கூறப்படும் நபர்கள் பட்டப்பகலில் நடுரோட்டில் ஆயுதங்களோடு ரவுடிசத்தில் ஈடுபட்ட பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Etv Bharat
Etv Bharat

சிசிடிவி காட்சி

திருநெல்வேலி:அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் கொடூரமாக பிடுங்கியதாக நேதாஜி சுபாஷ் சேனை என்ற அமைப்பு, பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பில் குற்றம்சாட்டியது.

பின்னர் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் செல்லப்பா மற்றும் அவரது சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் தங்களை காவல் நிலையத்தில் வைத்து, ஏஎஸ்பி பல்வீர் சிங் கட்டிங் பிளேயரை கொண்டு பல்லை பிடுங்கியதாகவும், சிலரது வாயில் ஜல்லிக்கற்களை போட்டு, கடிக்கச்சொல்லி துன்புறுத்தியதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். மேலும் மாரியப்பன் என்பவரது அந்தரங்க உறுப்பை தாக்கியதாகவும் அந்த வீடியோவில் குற்றம்சாட்டியிருந்தனர்.

இதையடுத்து இச்சம்பவம் விஸ்வரூபம் எடுக்கவே ஏஎஸ்பி மீதான புகார் குறித்து விசாரிக்க, சேரன்மகாதேவி சார் ஆட்சியரை விசாரணை அதிகாரியாக நியமித்து, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்துள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். இதற்கிடையில் கடந்த திங்கள் கிழமை முதல் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து, பாதிக்கப்பட்ட நபர்களை நேரில் வர வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

இதுவரை சங்கர், சூர்யா, சுபாஷ், வெங்கடேஷ் ஆகிய நான்கு பேரிடம் விசாரணை நடத்தியுள்ளார். இதில் சுபாஷ் தவிர, மீதமுள்ள மூன்று பேரும் காவல் அதிகாரி தனது பற்களை பிடுங்கவில்லை என்று சார் ஆட்சியரிடம் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. ஒரு பக்கம் ஏஎஸ்பி மீது அரசு உடனடி நடவடிக்கை எடுத்தது. இதனால் பெரும்பாலானோர் ஏஎஸ்பி பல்வீர் உண்மையாகவே கொடூரமானவர் என்று பரபரப்பாக பேசி வந்தனர்.

அதேசமயம் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த செல்லப்பா, ரூபன், அந்தோணி, மாரியப்பன், சுரேஷ், சுபாஷ், மற்றொரு மாரியப்பன், வேதநாராயணன் ஆகிய ஏழு பேரில் சுபாஷ் என்பவருக்கு மட்டுமே சார் ஆட்சியர் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினார். இதனால், மீதமுள்ள ஆறு நபர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், அவர்கள் தொடர்ந்து ஏஎஸ்பி பல்வீர் சிங் பல் பிடுங்கிய புகாரை வெளிப்படையாக செய்தியாளர்களிடம் தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையில் சம்மன் இல்லாமலும் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வரை இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் நேரில் வந்து விளக்கம் அளிக்கலாம் என்று சார் ஆட்சியர் நேற்று ( மார்ச் 30 ) உத்தரவிட்டார். இதனால், தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்த நிலையில் செல்லப்பா, அவரது சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் நடுரோட்டில் வைத்து, ஒரு நபரை அடித்து இழுத்துச்செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதாவது, விக்கிரமசிங்கபுரம் அடைய கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவரை தற்போது நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள சுபாஷ் (ஏஎஸ்பிக்கு எதிராக சாட்சியம் சொன்னவர்) என்பவர் தொடர்ந்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் இதுகுறித்து சுபாஷிடம் கேட்டபோது, சுபாஷின் நண்பர்களான செல்லப்பா மற்றும் அவரது சகோதரர்கள் மாரியப்பன், இசக்கிமுத்து, செல்லப்பாவின் நண்பர்கள் ரூபன், அந்தோணி, மாரியப்பன் மற்றும் சுரேஷ் ஆகியோர் மேற்கண்ட பெண்ணின் கணவரையும் அவரது நண்பரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அந்தப்பெண்ணின் குடும்ப நண்பரை, செல்லப்பா மற்றும் அவரது சகாக்கள் கடந்து 8ஆம் தேதி சிவந்திபுரத்தில் உள்ள செல்லப்பாவின் கசாப்பு கடைக்குள் வைத்து, வெட்டும் கத்தியால் கத்தியால் கொடூரமாக தாக்கியதாகவும், அவர் உயிருக்கு பயந்து ஓடியதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து குடும்ப நண்பர் மற்றும் அம்பாசமுத்திரம் பகுதியில் நின்றபோது, செல்லப்பா மற்றும் அவரது சகாக்கள் சேர்ந்து பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து அந்த குடும்பநண்பரை ஆயுதங்களோடு விரட்டிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தான் தற்போது வெளியாகி இருக்கின்றன. இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே சுபாஷ் சேனை அமைப்பினர் சின்ன சின்ன குற்றங்களுக்காக காவல் அதிகாரி பல்வீர் சிங் கைதிகளிடம் கொடூரமாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதே சமயம், செல்லப்பா மற்றும் அவரது சகாக்கள் நடுரோட்டில் பட்டப்பகலில் ஆயுதங்களோடு பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பினரை விரட்டும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. சிறிய குற்றமாக இருந்தாலும் பெரிய குற்றமாக இருந்தாலும் நீதிமன்றம் ஒருவரை குற்றவாளி என நிரூபிக்கும் முன் காவல் நிலையத்தில் கைதிகளை தண்டிப்பது சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் கூட, இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே காவல் அதிகாரியை கொடூரமாகவும், பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படும் நபர்களை மிக மிக நல்லவர்களாகவும் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் சித்தரித்திருப்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இதற்கிடையில் செல்லப்பாவால் பாதிக்கப்பட்ட அந்த குடும்ப நண்பரின் தாய் பேசும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அந்த தாய் பேசும்போது, தனது மகன் பெங்களூருவில் வேலை பார்த்து வந்ததாகவும்; விடுமுறையில் ஊருக்கு வந்தபோது தனது நண்பன் மனைவியை சுபாஷ் தொந்தரவு செய்ததாகவும் தெரிகிறது. அதற்கு தனது மகன் தட்டிக்கேட்டபோது செல்லப்பா மற்றும் அவரது சகோதரர்கள், நண்பர்கள் ஆகியோர் கத்தியை வைத்து தாக்கியதில் தனது மகன் தலையில் தையல் போடப்பட்டுள்ளதாகவும் அந்த தாய் தெரிவித்தார். மேலும், காவல் துறையினர் தான் தனது மகனை காப்பாற்றியதாகவும் அந்த தாய் தெரிவித்துள்ளார். இதனால், இவ்விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஏஎஸ்பி பல்வீர் சிங் விவகாரத்தில் திடீர் திருப்பம்.. நெல்லையில் நடப்பது என்ன?

ABOUT THE AUTHOR

...view details