தமிழ்நாடு

tamil nadu

"தகுதியான எங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வரல" - தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு பெண்கள் போராட்டம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 8:54 PM IST

Kalaignar magalir urimai thogai: தகுதியுள்ள மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என ஏராளமான பெண்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காததாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காததாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காததாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

தேனி:திமுக, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தது. அதன்படி, சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து இந்த வாக்குறுதி விரைவில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டம் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ என்ற பெயரில் துவங்கப்பட்டது. இதைக் கடந்த செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி, காஞ்சிபுரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அந்த வகையில், தமிழகத்தில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதில் பல குடும்பத் தலைவிகளுக்குக் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத நபர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இருப்பினும், தற்போதுவரை பல குடும்பங்கள் ஏழ்மை நிலையிலிருந்தும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் இருப்பதாகக் குற்றச்சாட்டுகளையும், வேதனைகளையும் முன்வைத்த வண்ணமே உள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டம் போடி பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், தங்களுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் தொகை கிடைக்கவில்லை எனக் கூறி ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த ஆயிரம் ரூபாய் தொகை பாதி பெண்களுக்கு மட்டும் கிடைத்துள்ளதாகவும், ஏராளமான பெண்களுக்குக் கிடைக்கவில்லை என்றும், உரிமைத் தொகைக்குத் தகுதியுள்ள வகையில் ஏழ்மை நிலையில் உள்ள தங்களுக்குக் கிடைக்காமல், வசதி படைத்தவர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் கிடைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

மேலும் அவர்கள், இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, மகளிர் கடன் பெற்றுள்ளதால் தங்களுக்கு ஆயிரம் ரூபாய் நிராகரிக்கப்பட்டதாகக் கூறுவதாகவும் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, “அனைத்து மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கொடுங்கள். இல்லை என்றால் அனைவருக்கும் ரத்து செய்து விடுங்கள். ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்” என மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் தங்களது ஆதங்கத்தைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவராகக் குமாரசாமி; தேவகவுடா நியமித்தார்!

ABOUT THE AUTHOR

...view details