தமிழ்நாடு

tamil nadu

தேனியில் முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 1:52 PM IST

Periyakulam auto driver murder: தேனியில் முன் விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரான பார்த்திபன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தப்பி ஓடிய இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

theni-periyakulam-auto-driver-murder-one-person-arrest-and-two-escaped
தேனியில் முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை

தேனி: பெரியகுளம் அருகே உள்ள தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட கைலாசபட்டி பகுதியில் ஆட்டோ ஓட்டுநராகப் பணி செய்து வருபவர், பார்த்திபன் (27). இவரின் வீட்டின் அருகே வசித்து வருபவர், கருப்பையா (55). ஆட்டோ ஓட்டுநரான பார்த்திபன் தினம்தோறும் மது போதையில் கருப்பையா வீட்டின் முன்பாக நின்று தகாத வார்த்தைகள் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனை கருப்பையா தட்டி கேட்பதால் அடிக்கடி பார்த்திபன் மற்றும் கருப்பையா இடையே பிரச்னை இருந்து வந்துள்ளதாகவும், இந்நிலையில் நேற்றும் (அக்.26) பார்த்திபன் வழக்கம்போல் மது போதையில் கருப்பையா வீட்டின் முன்பாக நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனை கருப்பையா தட்டிக் கேட்ட நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அம்பத்தூரில் போலீசாரை அடிக்க துரத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பு.. 5 வடமாநில தொழிலாளர்கள் கைது!

அதனைத் தொடர்ந்து, கருப்பையாவிற்கு ஆதரவாக மகன் முத்துப்பாண்டி மற்றும் மருமகன் ராஜவேல் ஆகிய மூவரும் சேர்ந்து பார்த்திபனை அரிவாள், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் பார்த்திபன் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டு கீழே விழுந்தார்.

இதனைத் தொடர்ந்து, அருகில் உள்ளவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர், தகவல் அறிந்து வந்த பெரியகுளம் தென்கரை காவல் துறையினர், படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பார்த்திபனை மீட்டு, பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில், பார்த்திபன் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:தஞ்சை வங்கிகளில் 2 கிலோ போலி நகைகளை அடகு வைத்து ரூ.69 லட்சம் மோசடி!

இதனையடுத்து, பார்த்திபனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பெரியகுளம் தென்கரை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

இந்த நிலையில், பார்த்திபனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவத்தில் ஈடுபட்ட கருப்பையா, தானாக முன்வந்து பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும், அவரது மகன் முத்துப்பாண்டி மற்றும் மருமகன் ராஜவேல் ஆகிய இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இருவரையும் தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆட்டோ ஓட்டுநர் கொலை குறித்து பெரியகுளம் தென்கரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:திமுக நிர்வாகியின் மகன் கொலை வழக்கு; சிறையில் இருக்கும் ரவுடிக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் அம்பலம்!

ABOUT THE AUTHOR

...view details