தேனி:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை, பெரியகுளம் நகராட்சி மற்றும் அதனைச் சுற்றி உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. அது மட்டுமல்லாமல், சுமார் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு நேரடி பாசன வசதி வழங்கி வருகிறது.
அதேநேரம், ஆண்டு தோறும் தென்மேற்கு பருவமழையின்போது அணையின் நீர்மட்டம் உயர்ந்து முழு கொள்ளளவை அடைந்து வந்தது. இந்த நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில், அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் இருந்து தற்போது அணையின் நீர்மட்டம் 71 அடியாக உள்ளது.
மேலும், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாத நிலையில் வடகிழக்கு பருவமழையும் போதிய அளவு பெய்யாததால், பெரியகுளம் நகராட்சி மற்றும் அதனைச் சுற்றி உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதோடு, பாசனத்திற்கும் நீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும், சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் எப்போது உயரும் என அணையின் பாசன விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனவே, அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில் தற்போது அணையின் நீர்மட்டம் 71 அடியாக உள்ள நிலையில், குடிநீருக்காக 3 கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
அணைக்கு நீர் வரத்து இல்லாத நிலையில், அணையின் மொத்த நீர் இருப்பு 31.58 மில்லியின் கன அடியாக உள்ளது. முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக சோத்துப்பாறை அணை தனது முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது.
இதனால், அப்போது உபரி நீர் அப்படியே வராக நதி ஆற்றில் வெளியேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, கடந்த மார்ச் மாதத்தில் சட்டவிரோதமாக மீன் பிடிக்கும் நபர்களால், அணையில் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அது மட்டுமல்லாமல், மீன்கள் செத்து மிதக்கத் தொடங்கின. இதனையடுத்து, குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, கழிவுநீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க:400 ஆண்டுகள் பழமையான மரத்திற்கு தீவைப்பு.. தேனியில் நடந்தது என்ன?