கடலூர் மாவட்டம், கொத்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி (65). இவர் வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவராக இருந்துவருகிறார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி தேனி மாவட்டம், சீலையம்பட்டிக்கு சென்றுவருவதாக தனது மகனிடம் கூறிச் சென்றுள்ளார்.
இதையடுத்து இரண்டு நாட்கள் ஆகியும் தந்தையிடமிருந்து அழைப்பு வராததால், சந்தேகமடைந்த கருணாநிதியின் மகன் வினோத் 20ஆம் தேதி சின்னமன்னூர் காவல் நிலையத்தில் தந்தையைக் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
மேலும் புகார் கொடுத்த அன்று சீலையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அஜ்மல்கான் (40) என்பவர் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காணாமல்போன தனது தந்தை கருணாநிதியை தேடவோ, விசாரிக்கக் கூடாது என செல்போன் மூலம் மிரட்டியதாக புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
வெளிநாட்டு வேலை வாங்கிதந்த ஏஜென்ட் கொலை புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சீலையம்பட்டி கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொள்ள முயன்றபோது அஜ்மல்கான் அரளிவிதையை அரைத்துக் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்பு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அஜ்மல்கானிடம் விசாரணையை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவலை அளித்தார்.
இதுதொடர்பாக காவல் துறை தரப்பில் கூறியதாவது, அஜ்மல்கானின் மனைவி ஆஷாபானுவுக்கு சென்ற வருடம் ஒப்பந்த அடிப்படையில், குவைத் நாட்டில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் அவரது மனைவியுடன் கருணாநிதியின் மகன் வினோத்குமார் நெருக்கமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அஜ்மல்கான், அவரை கொலைச் செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி செல்போன் மூலம் கருணாநிதியை தொடர்பு கொண்ட அஜ்மல்கான், தேனியில் இருந்து சிலர் வெளிநாடு செல்ல விரும்புவதாகவும், தேனி வந்தால் வேலை சுலபமாக முடிந்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார். இதை நம்பி கடந்த 16ஆம் தேதி தேனிக்கு வந்த கருணாநிதியை, அஜ்மல்கான் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தலையில் அடித்து கொலைச் செய்துவிட்டு தனது வீட்டின் அருகில் இருந்த காலி நிலத்தில் புதைத்துள்ளார்.
இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் பேரில் காலி நிலத்தில் புதைத்திருந்த கருணாநிதியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் அஜ்மல்கானிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.