தமிழ்நாடு

tamil nadu

உதகையில் உவகை கூட்டும் நீலக்குறிஞ்சி..!

By

Published : Oct 12, 2022, 7:47 PM IST

நீலகிரி மலைத் தொடர்களில் இவ்வருடம் குறிஞ்சி பூக்களின் செழிப்பால் உதகை மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்

Etv Bharat
Etv Bharat

நீலகிரி: குறிஞ்சிசெடி இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். மேற்கு தொடர்ச்சி மலையின் நீட்சியாக தமிழ்நாட்டில் நீலகிரி மலைத்தொடர்களில் காணப்படும் இச்செடிக்கு ‘நீலகிரி குறிஞ்சி’ என்ற பெயரும் உண்டு.

குறிஞ்சி செடிகள் புதர்வகையைச் சேர்ந்தவை. ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா என்பது அவற்றின் தாவரவியல் பெயர் ஆகும். இந்தக் குறிஞ்சிக் குடும்பத்தில் ஏறக்குறைய 200 வகைச் செடிகள் காணப்படுகின்றன. அவை அத்தனையும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.

அவற்றிலும், 150 வகைகள் வரையில் இந்திய நாட்டில் மட்டுமே காணப்படுகின்றன. இன்னும் குறிப்பாக, முப்பதுக்கும் மேற்பட்ட வகைகள் மேற்கு தொடர்ச்சிமலைகளான நீலகிரி, மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே வளர்கின்றன. பழந்தமிழர்களின் நிலவகை பகுப்பில், மலையும் மலை சார்ந்த நிலமும் "குறிஞ்சி" திணையாகக் குறிக்கப்படுகின்றன. இது தமிழரின் மலை நிலத்துக்கும் இந்தச் செடிகளுக்குமிடையேயான பிணைப்பைக் காட்டும்.

குறிஞ்சி பூக்களின் செழிப்பில் உதகை
நீலக்குறிஞ்சி மலர்ச்செடிகள் மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே வளர்கின்றன. உயரம் 30 முதல் 60 செ.மீ. வரையில் இருக்கும். பிரகாசமான அதன் ஊதாபூக்கள் கோயில் மணிகளின் உருவம் கொண்டவை. தற்போது நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மிக உயரமான மலை சிகரமாக திகழும் தொட்டபெட்டா மலைச் சிகரம் சுற்றியுள்ள மலைகளில் ஆங்காங்கே குறிஞ்சி மலர்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.

சில இடங்களில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பூக்ககூடிய குறிஞ்சி மலரும் , 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்ககூடிய குறிஞ்சி மலரும் பூக்கத் தொடங்கி உள்ளது. அவ்வாறு தற்போது பூக்கத் துவங்கியுள்ள குறிஞ்சி மலர்கள் இன்னும் ஒரு மாத காலத்தில் தொட்டபெட்டா மலைச் சிகரம் சுற்றியுள்ள மலை முழுவதும் பூத்துக் குலுங்கும். தற்போது குறிஞ்சி மலர்கள் பூக்கத் தொடங்கி உள்ளதால், தொட்டபெட்டா மலை சிகரத்தை சுற்றி வாழக்கூடிய மலைகிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:50 ஆண்டுகள் பழைமையான திருவாரூர் கோயில் சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details