ETV Bharat / state

50 ஆண்டுகள் பழைமையான திருவாரூர் கோயில் சிலைகள்  அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

author img

By

Published : Oct 12, 2022, 5:21 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் வேணுகோபால சுவாமி கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இரண்டு பழமையான சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

திருவாரூர்: மன்னார்குடி அருகே ஆலத்தூர் எனும் ஊரில் வேணுகோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் இருந்த விஷ்ணு, ஸ்ரீதேவி, மற்றும் பூதேவி ஆகிய மூன்று சிலைகள் திருடப்பட்டதாக 2017ஆம் ஆண்டு அறநிலையத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விக்ரபாண்டியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதன்பின் வழக்கு, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் விஷ்ணு, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகிய மூன்று சிலைகளும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மூன்று சிலைகளும் திருடப்பட்டு, கோயிலில் போலியான சிலைகள் வைக்கப்பட்டிருந்ததால் கோயிலில் மீதமுள்ள தொன்மையான சிலைகளான யோகநரசிம்மர், விநாயகர், நடனமாடும் கிருஷ்ணர், சோமஸ்கந்தர், நின்ற வடிவிலான விஷ்ணு, நடன சம்பந்தர் ஆகிய 6 சிலைகளும் பாதுகாப்பாக திருவாரூர் விஸ்வநாத சுவாமி கோயிலில் உள்ள ஐகான் சென்ட்ரில் வைக்கப்பட்டிருந்தது.

திருடப்பட்ட சிலைகள்
திருடப்பட்ட சிலைகள்

ஆனால், திருடப்பட்ட முந்தைய மூன்று சிலைகளைப் போல இந்த சிலைகளையும் போலியாக நிறுவப்பட்டு உண்மையான சிலைகள் திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதனடிப்படையில் ஐகான் சென்ட்ரலில் இருந்த சிலைகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவைகள் அனைத்தும் போலியான சிலைகள் என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியானது.

திருடப்பட்ட சிலைகள்
திருடப்பட்ட சிலைகள்

எனவே, கோயிலில் இருந்த ஒன்பது சிலைகளும் திருடப்பட்டு போலி சிலைகள் நிறுவப்பட்டது விசாரணையில் தெரிய வந்ததால் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று சிலைகளைப் போன்றே மீதமுள்ள சிலைகளும் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பாண்டிச்சேரியில் உள்ள இந்தோ - பிரெஞ்சு கலாச்சார மையத்தின் ஆவணங்களின் அடிப்படையில் சிலைகளைத் தேடத் தொடங்கினர்.

அமெரிக்காவிலுள்ள தனியார் அருங்காட்சியகம்
அமெரிக்காவிலுள்ள தனியார் அருங்காட்சியகம்

அதன்படி 6 சிலைகளில் யோகநரசிம்மர், விநாயகர் ஆகிய இரண்டு சிலைகளும் அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் கன்சாஸ் நகரில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேணுகோபாலசாமி கோயிலுக்குரிய இரண்டு சிலைகளையும் மீட்பதற்கான நடவடிக்கையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இன்ஸ்டாவில் "டூயட்" ரீல்ஸ் பதிவிட்ட மனைவியை வெட்டிய கணவன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.