தமிழ்நாடு

tamil nadu

நிலத்தை அபகரிக்க முயன்ற வழக்கு - முன் ஜாமீன் பெற்றார் மாஜி அமைச்சர் புத்தி சந்திரன்!

By

Published : Mar 17, 2023, 5:22 PM IST

நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் வயதான தம்பதியினரின் நிலத்தை மிரட்டி வாங்க முயன்ற வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன், உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்து முன் ஜாமீன் பெற்றார்.

Ooty
Ooty

நீலகிரி: நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகில் உள்ள மணிக்கல் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ராஜு மற்றும் அவரது மனைவி பிரேமா இருவரும், அவர்களுக்குச் சொந்தமான 15 சென்ட் தேயிலை தோட்டத்தில் பயிர் செய்து வந்தனர். இந்த தோட்டத்திற்கு அருகே இருந்த ராஜுவின் சகோதரருக்கு சொந்தமான தோட்டத்தை, அதிமுக முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன் விலைக்கு வாங்கியுள்ளார். பின்னர், ராஜுவின் தோட்டத்தையும் வாங்குவதற்காக கேட்டுள்ளார்.

அந்த இடத்தில் தேயிலை தொழிற்சாலை கட்டப்போவதாகக் கூறி நிலத்தை கேட்டுள்ளார். ஆனால், விலை குறைவாக இருந்ததால் ராஜு தனது தோட்டத்தை தர மறுத்துள்ளார். இதனால் புத்தி சந்திரன் ராஜுவிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தோட்டப் பிரச்னை தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தோட்டத்தை தரும்படி ராஜுவை புத்தி சந்திரன் மிரட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர் கடந்த டிசம்பர் மாதம் ராஜுவின் சகோதரரிடம் வாங்கிய தோட்டத்தில் சாலை அமைப்பதற்காக தேயிலைச் செடிகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியுள்ளார். அப்போது, அருகில் இருந்த ராஜுவின் நிலத்தில் இருந்த தேயிலைப் பயிர்களையும் அகற்றியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜு, தனது தோட்டத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக புத்தி சந்திரன் மீது மஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி புத்தி சந்திரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சம்மந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். பின்னர், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக புத்தி சந்திரனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த புத்தி சந்திரன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த நிலையில், முன் ஜாமீன் கிடைத்த நிலையில் புத்தி சந்திரன் நேற்று(மார்ச்.16) உதகையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இரண்டு பிணையதாரர்கள் கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் ஜாமீனில் வெளியே வந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சரான புத்திசந்திரன், கடந்த காலத்தில் கோடநாடு எஸ்டேட்டுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். இவர் சசிகலா தரப்புடனும் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையேற்ற பிறகு புத்தி சந்திரன் ஓரங்கட்டப்பட்டார்.

சசிகலாவுக்கு நெருக்கமாக இருந்த காரணத்தாலேயே புத்தி சந்திரனுக்கு சட்டப்பேரவை தேர்தலில் இடம் கொடுக்கப்படவில்லை என தெரிகிறது. பிறகு அதிமுகவில் தனக்கு எதிர்காலம் இல்லை என முடிவு செய்த இவர், கடந்த 2021ஆம் ஆண்டு திமுகவுக்கு செல்ல திட்டமிட்டதாகத் தெரிகிறது. இவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 5 மாதங்கள் காலம் மட்டுமே அமைச்சராக இருந்தார். பிறகு கடந்த 2011ஆம் ஆண்டு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதையும் படிங்க: முன்னாள் மாணவர்கள் உங்கள் பள்ளிகளை பார்வையிடுங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details