முன்னாள் மாணவர்கள் உங்கள் பள்ளிகளை பார்வையிடுங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்!

author img

By

Published : Mar 17, 2023, 3:25 PM IST

முன்னாள் மாணவர்கள் உங்கள் பள்ளிகளை பார்வையிடுங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்!

தாங்கள் படித்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியைச் சென்று பாருங்கள் எனவும், அதன் உள்கட்மைப்பிற்கு முன்னாள் மாணவர்கள் உதவ வேண்டும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள வீடியோ

சென்னை: அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பினை மேம்படுத்த பேராசிரியர் அன்பழகனார் கல்வி மேம்பாட்டுத் திட்டதில் 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுதோறும் மத்திய அரசின் அனைவருக்கும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் மற்றும் நபார்டு போன்றவற்றின் மூலம் நிதி பெற்று கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் அதிகளவு நிதியாக 30 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளிக்கல்வித்துறைக்குத்தான் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அதேநேரம், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பினை மேம்படுத்தும் வகையில் ‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ என்ற திட்டமும் ஆரம்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்தத் திட்டத்திற்கு பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் நிதி வழங்கலாம் என அரசு தெரிவித்திருந்தது. இருப்பினும், எதிர்பார்த்த அளவிற்கு நிதி வரவில்லை. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு ஒன்றை வீடியோ வாயிலாக வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பில், “கல்வி என்பது நம் இரு கண்கள் போல. இவ்வுலகைக் காண, நம் புரிதலை வளர்த்துக் கொள்ள, புதிய மனிதர்களைச் சந்திக்க, புதியப் புதிய இடங்களுக்குப் பயணப்பட நம்மை கல்விதான் அழைத்துச் செல்லும். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்களில் கல்வி கற்றவர்கள், இன்று உலகின் வெவ்வேறு நாடுகளில் வசிக்கிறீர்கள். உள்ளூரில் கற்ற கல்வி மூலம் கிடைத்த அறிவைப் பயன்படுத்தி, இன்று கை நிறைய ஊதியம் பெற்று, குடும்பத்தை நல்ல முறையில் பேணி வரும் பலர் இருக்கிறீர்கள். உங்களில் வேறு பலர் நல்ல நூல்களை வாசித்து, உங்கள் அறிவை வளர்த்துக் கொண்டிருக்கலாம்.

நீங்கள் புத்திசாலிகளாக, அறமிக்கவர்களாக இப்போது இருப்பதற்கு, உங்களிடம் நல்லியல்புகள் வளர்வதற்கு நீங்கள் கற்ற கல்வி உங்களுக்கு உதவி இருக்கும். இன்று நாம் நல்ல நிலையில் இருப்பதற்குக் காரணம், நாம் கற்ற கல்வியே. நம்மில் பலர் அரசுப் பள்ளிகளிலோ அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளிலோ படித்தவர்களாக இருப்போம். ஊரில் நாம் படித்த பள்ளி எப்படி இருக்கிறது என உங்களுக்கு அவ்வப்போது யோசனை வந்து சென்றிருக்கக் கூடும்.

ஊருக்குச் செல்லும்போது நம்மில் எத்தனை பேர் நாம் படித்த பள்ளிக்குச் செல்கிறோம்? இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் சொந்த ஊருக்குச் செல்லுதலே அரிதாகி விட்ட நிலையில், கிடைக்கும் இரண்டொரு நாட்களில் பள்ளிக்குச் சென்று பார்வையிடுவதற்கான நேரம் கிடைப்பதும் கடினமே. ஆனாலும், நாம் படித்த பள்ளியை நாம் கைவிடலாகாது. உங்கள் ஊருக்குச் செல்லும்போது மறக்காமல் அடுத்த முறை நீங்கள் பயின்ற பள்ளிக்குச் சென்று பார்க்க முயலுங்கள்.

உங்கள் பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எண்ணினாலோ, இப்போது படிக்கும் பிள்ளைகளின் கல்விக்கு உதவ எண்ணினாலோ, பள்ளிக்கு வேறு ஏதேனும் ஒரு வகையில் தொண்டாற்ற எண்ணினாலோ உங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகலாம். சொந்த ஊருக்கு வருவதற்கு நேரமில்லை என்றாலோ அல்லது வெளிநாடுகளில் இருந்தாலோ நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே உங்கள் பள்ளிக்கு உதவலாம்.

அதற்காகவென்றே உருவாக்கப்பட்டுள்ள https://nammaschool.tnschools.gov.in/#/alumini என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். பள்ளியிலும் வகுப்பிலும் உடன்படித்த நண்பர்களின் விவரங்களையும் விரைவில் அத்தளத்தில் காணலாம். இதன் மூலம் பால்யத்தில் ஒன்றாக ஓடியாடி விளையாடியவர்களையும், நம் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்ட தோழர்களையும் அத்தளத்தின் மூலம் கண்டுபிடித்து, அவர்களோடு தொடர்பை உருவாக்கிக் கொள்ளலாம்.

உங்கள் வகுப்பு நண்பர்கள் ஒரு குழுவாக இணைந்து, உங்கள் பள்ளிக்கு உதவலாம். அல்லது தனி நபராகவும் நீங்கள் உதவலாம். பள்ளிக்கூடம் என்பது நம் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அத்தகைய பள்ளிக்கூடத்திற்கு உங்களால் இயன்றதைச் செய்ய தமிழ்நாடு அரசு உங்களை அழைக்கிறது. வாருங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொன்னி நதி பாக்கணுமே... மதிப்புமிகு பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்ற கல்லணை, வீராணம் ஏரி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.